KOLNews

எழுத்தாளர் 'ஸ்டாலின் ராஜாங்கம்'..... சில எண்ணங்கள்.

இன்று வரலாற்றை தரவுகள் அடிப்படையில் மட்டுமே அல்லாது தொன்மங்கள், சிலை, சித்திரம், புகைப்படம், புவியியல் அடிப்படை, எழுதுபவரின் பார்வை, அரசியல், மக்கள் பார்வை, நூற்றாண்டுக்கு முற்பட்ட ஆவணங்கள், சமகால வரலாற்றிலேயே மறைக்கப்பட்ட நிகழ்வுகள் என்று மிக நுட்பமாக அவதானித்து களச் செயல்பாடுகள் மூலம் எழுதி வருபவர் திரு. ஸ்டாலின் ராஜாங்கம் அவர்கள். அவருடைய புத்தகங்கள் தற்பொழுது கவனம் பெறத் தொடங்கியுள்ளன.

ஆனாலும் அவர் ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றை நுட்பமாக தர்க்கரீதியில் எழுதுவதால் அதே பாணியில் பன்னெடுங்காலமாக சில தரவுகள் அடிப்படையில் நம்பிக்கை, அரசியல் சார்ந்து எழுதிய வரலாற்றை நம்புபவர்களுக்கு இவருடைய எழுத்துக்களை ஒப்புக் கொள்வது இக்கட்டாக உள்ளது. ஒரே காலத்தில் வாழ்ந்த அறிஞர்கள் ஒருவரை ஒருவர் அறியாமல் இருந்தார்கள் என்பது நம்பக் கூடியதில்லை. ஆனாலும் அத்தலைவர்கள் யாரை முன்னிலைப் படுத்தி எழுதியுள்ளனர், யாரை தவிர்த்துள்ளனர் என்பதையும் சேர்த்து பாக்கும் பொழுது அதன் பின்னால் உள்ள சமூக, அரசியலில் இருக்கும் வெற்றிடத்தை அல்லது மறைக்கப்பட்டதை ஸ்டாலின் ராஜாங்கம் தர்க்கரீதியாக ஆவணப்படுத்துகிறார். 

திரு. ஸ்டாலின் ராஜாங்கம் அவர்களின் ஓரிரு கட்டுரைகள் படித்துள்ளேன். 'பெயரழிந்த வரலாறு' வாசிப்பில். எழுதாக் கிளவியில் அவர் குறிப்பிட்டுள்ள 'ரெட்டியூர் பாண்டியன்' சிலை இன்றும் காட்டுமன்னார்குடி பேருந்து நிலையத்தில் உள்ளது. அதன் பின்னால் உள்ளது கூட சமாகல வரலாற்றின் மறைக்கப்பட்ட ஒரு பக்கம்தான். அது போலத்தான் 'தாளமுத்து - நடராசன்' பயர் வரிசையும். நாம் வரலாற்றை வீரம், பெருமிதம் சார்ந்துதான் பார்க்க கற்றுக் கொடுக்கப் பட்டுள்ளோம். அது வழக்காற்றில் பெரும்பாலும் மேட்டுக்குடி மக்கள் வரலாறாகவே இருக்கவும் செய்கிறது. 

ஒடுக்கப்பட்ட தலீத் மக்களின் உரிமைப் போராட்டங்கள், அதை வழிநடுத்திய தலைவர்கள் வரலாறு நெடுகிலும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்கள் சமூக அந்தஸ்தின் பொருட்டு இவை ஆவணப்படுத்தப்பட இயலாமல் மக்கள் வாய்வழிப் பாடல்களாக, அல்லது சில அடையாள தொன்மங்களாக இருந்து கொண்டிருக்கிறது. இன்று தலீத் ஆளுமைகளாக அறியப்படும் அயோத்தி தாசர், ரெட்டைமலை சீனிவாசன், எம்.சி ராஜா போன்றவர்கள் பற்றிய வரலாற்று விபரங்கள் கூட அதிகம் இல்லை. 1960களிலேயே 'இழிதொழில் மறுப்பு இயக்கம்' நடத்திய காங்கிரஸ் தலைவர் திரு.இளையபெருமாள் பற்றிய ஆவணப் பதிவுகள் கூட கிடையாது. 

ஸ்டாலின் ராஜாங்கம் எழுத்தைப் போலவே அவர் பேச்சும் முக்கியமான ஒன்று. தனது தரப்பில் இருக்கும் நியாயத்தை கச்சிதமாக எடுத்து வைக்கிறார். மாற்றுக் கருத்தையும் சேர்த்து அங்கீகரித்துதான் தன் தரப்பையும் முன்னிருத்துகிறார். அவர் எழுதுவதோடு மட்டும் நில்லாமல் அந்த எழுத்தை பலருக்கும் கொண்டு சேர்க்க வேண்டிய அவசியமும் உள்ளது. காரணம் இன்று எழுத்து கண்டிப்பாக சந்தைப்படுத்தப்பட வேண்டியுள்ள காலம். 

நண்பர் Aravindan Kannaiyan  இரு வாரங்களுக்கு முன்பு முன்னெடுத்த முயற்சியில் பேசிய ஆதவனும், உதயராஜா அவர்களும் ஸ்டாலின் ராஜாங்கத்தின் எழுத்துக்கள் ஒரு இயக்கமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன் வைத்தனர். இன்று இலக்கியத்தில் இந்தப் போக்கு உள்ளது. அதன் தகுதிகளுக்குள் நான் செல்ல விரும்பவில்லை. ஆனால் ஸ்டாலின் ராஜாங்கத்தின் புத்தகங்களுக்கு அந்தத் தகுதி இருப்பதாகவே நான் படித்தவரை உணருகிறேன். அவர் எழுதுவது ஆய்வுக் கட்டுரைகள். இந்த சமூகத்தின் பெரும்பான்மை எதை மட்டுமே ஆவணப்படுத்தியுள்ளது, சமாகலத்தில் கூட எவ்வாறு ஆவணப்படுத்தி வருகிறது என்பதன் மேல் அவர் வைக்கும் கேள்வியும் விமர்சனமும் மிக முக்கியமானவை. 

இது பொதுவெளியில் விவாதிக்கப் பட வேண்டியது மிகவும் அவசியம். நேற்று 'பாலம்' புத்தக நிகழ்வு இவரின் 'எழுதாக் கிளவி' புத்தகம் பற்றிய ஒரு விவாத்தை முன்னெடுத்து இருந்தது ஒரு நல்ல விஷயம்.

-------------------------------------------------------

கட்டுரையாளர் - பார்த்திபன் இரத்தினவேலு 

English Summary

Author 'Stalin Rajangam' ..... Some Thoughts.

Latest Articles

KOLNews