KOLNews

ரேச்சல் கார்சனின் மௌன வசந்தம்.. ஒரு அறிமுகம்..! - இரசாயன தொழிற்சாலைகளுக்கு எதிரான போர்

மெய் - சேது ராமலிங்கம் 
---------------------------------------

30 ஆண்டுகளுக்கு முந்தைய தலைமுறையினரை கேட்டுபாருங்கள் நீங்கள் வயல் காடுகளில் ஆற்றோரங்களில் நடந்து சென்றுள்ளீர்களா அங்கு என்னவெல்லாம் பார்ப்பீர்கள் கேட்பீர்கள் என்று கேளுங்கள் பறவைகளின் விதவிதமான ஒலிகள் குருவிகள் அங்கும் இங்கும் பறப்பது தேனீக்களின் இடைவிடாத ரீங்காரம் பல வித நறுமணங்கள் இவை அனைத்தும் கலந்த அந்த குளிர்ச்கியான ரம்மியமான சூழலை பிரிய மனமிருக்காது என்று அனுபவித்து சொல்வார்கள்

அந்த வசந்தம் தற்போது எங்கே போனது எங்கும் அமைதி பறவைகளின் சத்தமோ வண்டுகளின் ரீங்காரமோ எதுவுமே கேட்கவில்லை. ஒரு வகையான மயானஅமைதியே நிலவுகிறது. உண்மையை கூறினால் வசந்தம் மரணித்து விட்டது. வசந்தம் மௌனிக்க வைக்கப்பட்டது.

இது எப்படி நிகழ்ந்தது

அமெரிக்காவில் சரியாக நூறாண்டுக்கு முன்னதாக பிறந்தவர்தான் ரேச்சல் கார்சன். அவர் கடலியல் ஆராய்ச்சியாளரும் அறிவியலாளரும் ஆவார்.அவர் எழுதிய கடல்வாழ் உயிரினங்கள் கடலியல் குறித்தும் எண்ணற்ற நூல்கள். புகழ் பெற்றவை.

அவர் எழுதிய மௌன வசந்தம்தான் உலகம் முழுவதும் குலுக்கிய நூல். அவரின் மௌன வசந்தத்திற்ள் போகும் முன்னதாக நாம் வாழும் சூழல் குறித்து சில அடிப்படை உண்மைகளை தெரிந்து கொள்வோம். மனித குலம் எண்ணற்ற உயிரினங்கள் நுண்ணுயிரிகள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் பூமியில் மட்டுமே உள்ளது. இதை உயிர் மண்டலம்( Life Zone ) என்கிறோம். இந்த உயிர் சூழலில் அனைத்தும் உயிரினங்களும் ஏதோ ஒரு வகையில் ஒன்றை சார்ந்தும் பின்னி பிணைந்தும் பிரிக்க முடியாத சங்கிலித் தொடராக உள்ளன. இதில் ஒரு கண்ணியை அறுத்து விட்டாலும் மொத்த சூழலுக்கும் உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படும். 

இங்கு எடுத்துக்காட்டாக ஒளிச்சேர்க்கை செய்யும் புல்லிலிருந்து தொடங்குவோம். புல்லை உண்ணும் வெட்டுக்கிளி இந்த வெட்டுக்கிளியை உண்ணும் தவளை, அந்த தவளையை உண்ணும் பாம்பு,அந்த பாம்பை உண்ணும் பருந்து என இந்த சங்கிலி தொடர் நீளுகிறது இது ஒரு வகையான உணவுச்சங்கிலி இது நேரடியான உணவுச்சங்கிலியாக இருக்கிறது ஏனெனில் புல்லை வெட்டுக்கிளிகள் மட்டும் உண்பதில்லை. ஆடு மாடுகள்

தின்கின்றன.இந்த ஆடு மாடுகளை புலி தனது விருந்தாக்குகிறது. ஆக ஒரு உணவுச்சங்கிலியிலிருந்து இன்னொரு கிளை உருவாகி விட்டது இதோ இன்னொரு வயலில் விளையும் தானியங்களை உண்ணும் எலியை பாம்பு உண்கிறது. பாம்பு கீரிக்கு உணவாகிறது. இவ்வாறு பல்வேறு வகையில் உணவுச் சங்கிலிகள் உள்ளன.

அதாவது உயிரினங்கள் அவை நுண்ணுயிரிகள் ஆனாலும் அவை ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன. இச்சிக்கலான சங்கிலித் தொடரில் நம்மால் அறியப்படாத பல்வேறு வகையிலான உயிரினங்களும் நுண்ணுயிரிகளும் உள்ளன. இவற்றின் எண்ணிக்கையும் ஒவ்வொரு கட்டத்திலும் இயற்கையாகவே கட்டுபடுத்தப்பட்டு சமப்படுத்தப்படுகின்றன.இவற்றில் ஒவ்வொரு உயிரினங்களின் முக்கியமாக இங்கு

விவாதிக்கப்படக்கூடிய பூச்சி இனங்களும் இதில் அடங்கும்.இந்த இனங்கள் தங்களது பிறப்பாலும் இறப்பாலும் சமச்சீர் நிலைமை மாறாமல் தக்க வைத்துக் கொள்கின்றன.அவை காலங்காலமாக பரிணாம வளர்ச்சி அடைந்தாலும் தங்களது சமச்சீர் நிலைமையை பரமரித்து வருகின்றன.

இதில் ஒரு கண்ணியை வெட்டினாலும் பல உயிரினங்களும் அழிந்துவிடும் முக்கியமாக நுண்ணுயிரிகள் அழிந்து விடும் அபாயம் உள்ளது. ஆனால் மனிதன் தனது உற்பத்தியை அதிகரிக்க செய்வது என்ற பெயரில் இயற்கையில் பல ஆயிரம் ஆண்டுகளாக உருவான சங்கிலியை வெட்டி வீழ்த்தி விட்டான்.

தானியங்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு உரம் பூச்சி மருந்துகள் ஆகியவற்றை பயன்படுத்தினான் . இதனால் பெரும்பாலான பூச்சி இனங்கள் அதைச்சார்ந்துள்ள பறவை இனங்கள் அழிந்து விட்டன. அது மட்டுமின்றி நீர் ஆதாரங்கள் நிலத்தடி நீர் உள்ளிட்டு அனைத்திலும் பூச்சி கொல்லி மருந்துகள் கலந்து விட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

English Summary

Rachel Carson's Silent Spring .. An Introduction ..! - The war against the chemical industry

Latest Articles

KOLNews