KOLNews

ரஜினியின் திரை வெற்றியும் , அரசியல் வெற்றி வாய்ப்பும்...

ஒரு காலத்திய தீவிர ரஜினி ரசிகன் பார்வையில் இருந்து. 

ஒரு அசாத்திய திறமையும், சரியான வாய்ப்பும், மறுமலர்ச்சிக்கான தேவையும்(வெற்றிடமும்) இருக்கும் பட்சத்தில் ரஜினி, கமலால் சினிமாவில் ஜெயிக்க முடிந்தது. அதற்கு நீண்ட காலமாக எந்தவித மாற்றமும் இல்லாத clicheவான திரைப்படங்கள் தொடர்ந்து வெளி வந்து கொண்டிருந்ததும், எம்ஜிஆர், சிவாஜி காலங்களின் திரையுலக வாழ்வு விளிம்பை நெருங்கியதும் ஒரு காரணம். 

தமிழ் திரையுலகில் இளையராஜா, பாரதிராஜா, மகேந்திரன் போன்றவர்களும் அவரவர் தளங்களில் பெரு வெற்றி பெற்றனர. கமல், ரஜினியும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் விதிவிலக்குகளை பொதுவிதிகளாக எடுத்துக் கொள்ள முடியாது. இதில் முக்கியமாக பார்க்கப் பட வேண்டியது அவர்களின் அக மாற்றங்கள். விளிம்பு நிலையிலிருந்து மேலே செல்பவர்கள் அவர் சார்ந்த சமூகத்தின் மாற்றத்திற்கு என்ன செய்கிறார்கள் என்றும் கவனிக்க வேண்டியுள்ளது. 

Why there can never be another Ilayaraja | Fully Filmy

கமல் ஜாதியில்லை என்று பேசிக் கொண்டே என்ன செய்தார் என்று அலசிப் பாருங்கள். இளையராஜா எப்படி மாறினார் என்று ஒப்பிட்டு பாருங்கள். ஜேசுதாஸ் என்னவாக மாறினார், ஏ.ஆர் ரகுமான் இலகுவாக எப்படி தன்னை மாற்றிக் கொண்டார் என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த மாற்றங்கள் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியவை. வசதியும் வாய்ப்பும் கண்டிப்பாக ஒருவரை எல்லா ரீதியிலும் செழுமை அடைய செய்து மேம்படவே செய்யும். 

The outrage against my speech reflects how caste works in society': Pa  Ranjith | The News Minute

ஆனால் அதன் வெளிப்பாடு அவர் வளர்ந்த சமூகத்திற்கோ, அல்லது பொது சமூகத்திற்கோ ஏதோவொரு விதத்தில் பயன்பட்டிருக்கிறதா என்பது இங்கு முக்கியம். உதாரணமாக இயக்குநர் பா. ரஞ்சித்தின் செயல்பாடுகளைப் பாருங்கள். நான்கே படங்கள். அதிலும் இரண்டு ரஜினியை வைத்து. அதன் மூலம் ஈட்டிய புகழ், வசதியை அவர் தனது சமூகத்திற்காக கடந்த இரண்டு வருடங்களில் எவ்வாறு பயன் படுத்தி உள்ளார். 'நீலம் பண்பாட்டு மையம்' நீலம் புத்தகம் வெளியீடு என்று அவரது களம் விரிவடைந்து கொண்டே செல்கிறது. இதை அவரது அரசியல் நுழைவிற்கான ஒரு சரியான அடித்தளமாகப் பார்க்கிறேன். 

karunanidhi death: Friends & foes: How Karunanidhi and MGR made each other  | Chennai News - Times of India

சற்றே பின்னோக்கி செல்வோம். எம்ஜிஆர்..... இந்த பிம்பம்தான் இன்று பல சினிமா ஆளுமைகளின் அரசியல் பிரவேச ஆதர்ஷம். ஆனால் அவர் அருகில் நெருங்க சற்றும் அருகதையற்ற அரூபங்கள் இன்றைய திரை நடிகர்கள். தனது திரை, அரசியல் வாழ்க்கையை ஒவ்வொரு நொடியும் திட்டமிட்டு வளர்ந்தவர். திமுகவை எம்ஜிஆரும், எம்ஜிஆரை திமுகவும் பயன்படுத்திக் கொண்டதா என்ற விவாதத்திற்குள் போக விரும்பவில்லை. இரண்டுமே ஒன்றுக்கொன்றாக உதவியாக இருந்தது என்பதே என் எண்ணம். இறுதியில் எம்ஜிஆர் கை ஓங்கியதும் வரலாறு. கழகங்களின் வீழ்ச்சியை அதுவே தொடங்கியும் வைத்தது. 

நிகழ் காலத்திற்கு வருவோம். Young Angry Man அமிதாப்பின் தமிழகப் பிரதியாக வெற்றி பெற்ற ரஜினி 1990களுக்குப் பிறகு தனது திரை வணிகத்தை பெருக்கவும், ஈட்டிய பெரும் செல்வத்தை காக்கவும் ஆளும் வர்க்கத்தினருடன் இணக்கமான போக்கை கையாளத் துவங்கினார். அதற்கான முன் அனுபவம் அவருக்கு உண்டு. ஏதோ ஒரு அழுத்தத்தில் ஏற்பட்ட மனக்கிலேசத்தில் நடந்ததுதான் 1996 ஜெயலலிதாவுக்கு எதிரான கோஷம். 2001ல் ரஜினியே அவரை தைரியலட்சுமியாக்கி வழிபட்டார். 

Rajinikanth 'U' turn for Jayalalitha

இதில் அவர் கற்றுக் கொண்ட மிகப் பெரும் வணிக உத்தி அரசியலை தனது சினிமா வெற்றிக்கு தந்திரமாக பயன் படுத்திக் கொண்டது. இந்தப் புள்ளியில் வைத்து எம்ஜிஆர், ரஜினி இருவரையும் சிறிது ஒப்பிட்டுப் பாருங்கள். எம்ஜிஆர் சினிமாவை அரசியலுக்கு பயன்படுத்தி ரசிகர்கள் உதவி கொண்டு ஆட்சியை பிடித்தவர்.அவர்களை ஏமாற்றவில்லை. மாறாக எல்லா உதவிகளையும் செய்தவர். அவரது ஆட்சி பற்றி இருக்கும் விமர்சனங்கள் தனி விவாத்திற்கானது. 

Petta releases, Rajinikanth fans go crazy! - Rediff.com movies

ஆனால் ரஜினியின் அரசியல் அருவருப்பானது. தன் சுயலாபத்திற்காக ரசிகர்களுக்கு அரசியல் போதை ஏற்றி இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக தன்னை மட்டும் வளர்த்துக் கொண்டவர். இன்று ஏதோவொரு நிர்பந்தம் பொருட்டு தனது நிலையை தக்கவைக்கும் சுயலாபக் கணக்கிற்கு ரசிகர்களை பலியிடவும் தயாராகி விட்டது தெரிகிறது. ரஜினியின் சினிமா வெற்றி போல அரசியல் வெற்றி அவ்வளவு சுலபமல்ல. கால சுழற்சியின் மாற்றத்தில் எல்லோருக்கும் கள யதார்த்தமும், தெளிவான சிந்தனையும் நன்றாகவே உள்ளது. வரும் 2021 தமிழக தேர்தல் ரஜினிக்கு முடிவுரை எழுதும். அவர் திரைவாழ்விற்கும் சேர்த்தே.

ஒளியை இழந்து எரிநட்சத்திரமாக மாற இருக்கும் ரஜினிக்கு என் அனுதாப பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

-------------------------------------------

கட்டுரையாளர் - பார்த்திபன் இரத்தினவேலு.

English Summary

Rajini's screen success and chance of political success ...

Latest Articles

KOLNews