சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரி வளாகத்தில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. அண்மை காலமாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வரும் நிலையில், இந்த தேர்தல் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
நேற்று மாலை 4 மணிக்கு நடந்த முடிந்த இந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, பி.எல். தேனப்பன் ஆகியோர் போட்டியிட்டனர். இந்நிலையில்,இன்று காலை வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. தலைவர் பதவிக்கு போட்டியிட்ட திரு.டி.ராஜேந்தர், 337 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். 557 வாக்குகள் பெற்ற தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி பெற்று புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார். சுயேட்சையாக போட்டியிட்ட பி.எல். தேனப்பன் 87 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
அதே போல , துணைத்தலைவர் பதவிக்கு, தயாரிப்பாளர் நலன் காக்கும் அணி சார்பில் போட்டியிட்ட திரு.ஆர்.கே.சுரேஷ் மற்றும் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட திரு.கதிரேசன் வெற்றி பெற்றுள்ளனர். இதேபோல், கௌரவச் செயலாளர் பதவிக்கு, தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி அணியைச் சேர்ந்த திரு.ராதாகிருஷ்ணன், டி.ஆர். அணியைச் சேர்ந்த திரு.மன்னன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். பொருளாளர் பதவிக்கு, தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி அணி சார்பில் போட்டியிட்ட திரு.சந்திரபிரகாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
English Summary
T. Rajender loses in filmmakers' union election