KOLNews

உவ்வே.! - உபி மாநில மதிய உணவில் ‘செத்த எலி’! - தொடரும் அவலங்கள்

உ,பி. மாநில அரசுப் பள்ளி ஒன்றில் வழங்கப்பட்ட மதிய உணவில் செத்த எலி ஒன்று மிதந்து காணப்பட்டது. இதை அறியாமல்  உண்ட ஒரு ஆசிரியர் உட்பட 9 மாணவர்கள்  மயக்கமடைந்தனர். 

அதையடுத்து அவர்கள்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம், ஹாபூர் நகரில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளியில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், அவர்களுக்கு தேவையான மதிய உணவை என்.ஜி.ஓ. நிறுவனமான ஜன் கல்யாண் சான்ஸ்தா என்ற அமைப்பு செய்து கொடுக்கிறது. 

அந்தவகையில், இன்று வழங்கப்பட்ட மதிய உணவில் செத்த எலி ஒன்று மிதந்து காணப்பட்டது. இது சாம்பாரில் கிடந்ததா? அல்லது சாதத்தில் விழுந்ததா என்பது தெரியவில்லை.

இந்நிலையில், மதிய உணவில் எலி மிதக்கும் புகைப்படம் இணைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதைத்தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்வதற்கு முசாபராபாத் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே,சில நாட்களுக்கு முன்பாக ஒரு லிட்டர் பாலில் ஏராளமான தண்ணீரை கலந்து, அதனை 81 மாணவர்களுக்கு வழங்கிய சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்தது நினைவிருக்கலாம்.

அதே போல, கடந்த செப்டம்பர் மாதத்தின்போது, அரசுப் பள்ளி உணவை சாப்பிட்ட குழந்தைகள் ரொட்டியையும், அதற்கு சைட் டிஷாக உப்பையும் தொட்டு சாப்பிட்டனர். 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒன்றரை லட்சம் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படுகிறது. இதனால் ஒரு கோடிக்கும் அதிகமான குழந்தைகள் பலன் அடைவதாக மாநில அரசால் பெருமையாக தெரிவிக்கப்பட்டாலும்,  சர்ச்சைகள் குறைந்தபாடில்லை.

English Summary

Dead rat in mid-day meals ! - Continued distress

Latest Articles

KOLNews