மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களையும், ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும், டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தக்கோரிய பொது நல மனுக்களும்,, தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
.அப்போது, மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், வேளாண் சட்டங்களை அமல்படுத்தியே தீருவோம் என மத்திய அரசு நினைப்பது ஏன்? எனத் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டனர். அத்துடன், மத்திய அரசு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முன்னேற்றமும் ஏற்படாதது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாகவும் தெரிவித்தனர்.
மேலும், புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய அரசு தயாரா? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அப்படி நிறுத்தினால், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உச்சநீதிமன்றமே குழு அமைத்து தரும் என்று கூறினர். புதிய வேளாண் சட்டங்கள் பயனளிப்பதாக உள்ளன எனக்கூறி எந்த மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை என்பதை குறிப்பிட்ட நீதிபதிகள், கடும் குளிரில் விவசாயிகள் போராடுவதையும் தற்கொலை செய்வதையும் சுட்டி காட்டினார். அத்துடன், வயதானவர்களும், பெண்களும் சாலைகளில் நிற்கையில் புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு ஏன் நிறுத்தி வைக்க கூடாது? எனக் கேள்வி எழுப்பினர். மத்திய அரசு நிறுத்தி வைக்காவிடில், வேளாண் சட்டங்களை உச்சநீதிமன்றமே நிறுத்தி வைக்கும் என்றும் நீதிபதிகள் கடுமையாக எச்சரித்தனர். அகிம்சை வழியில் விவசாயிகள் போராட்டத்தை தொடருவதாகவும், போராட்டத்தை மேலும் தொடர விரும்பினால், அவர்கள் தொடரலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
English Summary
Farmers' strike issue - Supreme Court strongly condemns the federal government.