KOLNews

விடாத கனமழை..! - கேரளாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..!

கடந்த ஒரு சில நாட்களாக தென்மேற்கு பருவமழையின் தாக்கம் அதிகமாகி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரளா மற்றும் தமிழகத்தின் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. 

கேரள மாநிலம் முழுவதும் இடைவெளியின்றி பெய்யும் மழையால், தாழ்வான பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. அதனால் தேயிலைத் தோட்டங்கள் வழியே காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. 

மேலும், வயநாட்டில் மேப்பாடி, புதுமலை பகுதிகளில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் தொழிலாளர்களின் குடியிருப்புகள், கோயில், மசூதி ஆகியவை அடித்து செல்லப்பட்டன. நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் பொற்கால அடிப்படையில் துரிதப்பட்டுள்ளது

இந்த தொடர் மழையால், மின் வினியோகம், போக்குவரத்து உள்ளிட்ட சேவைகள் தடைபட்டுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியுள்ளது. கேரளாவின் இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு பகுதிகளுக்கு இன்று கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டது. திருச்சூர், பாலக்காடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய பகுதிகளுக்கும் எச்சரிக்கை விடப்பட்டது.

மேலும்,  கொச்சி விமான நிலையம் நள்ளிரவு வரை மூடப்படும் என அறிவித்துள்ளது. ரன்வேயில் தண்ணீர் சூழ்ந்ததை தொடர்ந்து கொச்சி விமான நிலையம் மூடப்பட்டது. விமான நிலையத்தில் மற்ற சேவைகளும் பாதிப்பு அடைந்துள்ளன. 

அடுத்த சில தினங்களில் ஐயப்ப தரிசனம் செய்ய பக்தர்கள் சபரிமலை செல்ல இருக்கும் நிலையில், பம்பை நதியில் இயல்பை விட 6 அடிக்கு மேல் தண்ணீர் பெருக் கெடுத்துள்ளது. இதனால் ஆறுகளின் கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுமாறு, பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். 

இந்நிலையில் , கனமழை காரணமாக மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறுவதாக பல்கலைக்கழகத் தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

English Summary

Heavy Rain - Holidays for schools and colleges in Kerala today!

Latest Articles

KOLNews