KOLNews

வட்டிவசூலிப்பு ..! - மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

வங்கி கடன் தவணைகளை செலுத்துவதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டாலும், வட்டி குறித்து எந்த சலுகையும் அறிவிக்கப்படாத நிலையில், கடன் தவணை சலுகை கால வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை பலதரப்பினராலும் எழுப்பப்பட்டு வந்தது. 

இந்நிலையில் இது குறித்து மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தத்தா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், 

"மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் கடன் தவணையை செலுத்த முதலில் மூன்று மாதங்களும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் மேலும் மூன்று மாதங்களும் அவகாசம் அளித்துள்ளன. ஆனால் இந்த அவகாச காலத்தில் வட்டி கணக்கிடப்பட்டு கடன் தாரரின் கணக்கில் சேர்க்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடன் தவணை செலுத்த சலுகை அளித்து விட்டு அக்காலத்திற்கான வட்டி வசூலிப்பது நியாயமற்றது, சட்ட விரோதமானது. ஏராளமானோர் ஊரடங்கால் வேலை இழந்துள்ளனர்.

இந்த சுழலில் கடன் தவணை காலத்தில் செலுத்தப்படாத வட்டியை கணக்கிடுவது கூட்டு வட்டி போன்றது. இதனால் செலுத்த வேண்டிய கடன் அதிகமாகும். அத்துடன் தவணைக் காலமும் அதிகரிக்கும். எனவே கடன் தவணை சலுகைக் காலத்தில் வட்டி வசூலிக்க தடை விதிக்க உத்தரவிட வேண்டும்".,

என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதையடுத்து, நேற்று இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு முன் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக ஒரு வாரத்தில் பதில் அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கிக்கு 'நோட்டீஸ்' அனுப்ப அமர்வு உத்தரவிட்டது.

English Summary

Interest rate ..! - The Supreme Court directs the Central Government and the Reserve Bank to explain

Latest Articles

KOLNews