KOLNews

‘டிரோன்’களைப் பதிவு செய்வது கட்டாயம்..! - உஷாரான விமானப் போக்குவரத்து அமைச்சகம்..!

'டிரோன்' என அழைக்கப்படும் ஆளில்லா சிறிய ரக விமானங்களை வைத்திருப்போர்  வரும் 31-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டுமென்று விமானப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன்,பதிவு செய்யத் தவறுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சகம் எச்சரித்துள்ளது. 

அண்மையில், ஈரானின் முக்கிய படைப் பிரிவுத் தலைவா் காசிம் சுலைமானியை ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா கொன்றது. இந்நிலையில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் ,

பொதுமக்கள் பயன்படுத்தி வரும் ஆளில்லா சிறிய ரக விமானங்கள், விமானப் போக்குவரத்து நடைமுறைகளைப் பின்பற்றுவதில்லை.ஆகவே, ஆளில்லா சிறிய ரக விமானங்களின் உரிமையாளா்கள் அவர்களாக முன்வந்து தங்களையும், தங்களது விமானங்கள் தொடா்பான விவரங்களையும் பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது.

அதன்படி, வரும் 31-ஆம் தேதிக்குள் ஆளில்லா விமானங்கள் தொடா்பான தகவல்களை அதன் உரிமையாளா்கள் இணையவழியில் பதிவு செய்ய வேண்டும். இந்த வாய்ப்பு ஒருமுறை மட்டுமே வழங்கப்படும். இணையவழியில் பதிவு செய்யப்படும்போது, ஆளில்லா விமானத்துக்கான அடையாள எண்ணும் (டிஏஎன்), அதன் உரிமையாளருக்கான அடையாள எண்ணும் (ஓஏஎன்) வழங்கப்படும்.

ஆளில்லா விமானங்களை இயக்குவதற்கு அடையாள எண்கள் கட்டாயமாகும். எனினும், அடையாள எண்கள் மட்டும் ஆளில்லா விமானங்களை இயக்குவதற்கான அனுமதியாகக் கருதப்படாது. விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் விதிமுறைகளையும் ஆளில்லா விமானங்கள் கடைபிடித்தாக வேண்டும். 

அத்துடன், ஆளில்லா விமானங்களைப் பதிவு செய்யத் தவறுபவா்கள் மீது இந்திய குற்றவியல் சட்டம், விமானப் போக்குவரத்து சட்டம் ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்',

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

It's mandatory to register drones - Ministry of Aviation ..

Latest Articles

KOLNews