KOLNews

முக்கிய பிரமுகர் கழுத்தை அறுத்து சுட்டுக் கொலை ! - உ.பி யில் பதற்றம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் செயல்பட்டு வரும் இந்து அமைப்பான ஹிந்து சமாஜ் கட்சியின் நிறுவனர் கமலேஷ் திவாரி என்பவர் கொடூரமாக கழுத்து அறுக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

அதையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் அம்மாநில அரசு குற்றவாளிகளை கண்டுபிடிக்க 10 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டையை துவங்கியுள்ளது.

முன்னதாக கடந்த 2015ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் இந்து சமாஜ் கட்சியை கமலேஷ் திவாரி தொடங்கினார். எப்போதும் தனது சர்ச்சை மிகுந்த பேச்சுக்களால் மாநிலம் முழுவதும் அவர் பரபரப்பாக பேசப்படுபவர்.  அதையடுத்து அவ்வப்போது பல்வேறு வழக்குகளில் சிக்கிய அவரை, போலீசார் தேசப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதனை எதிர்த்து அவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் அவரை வழக்கில் இருந்து விடுவித்தது. 

இந்நிலையில், லக்னோவில் உள்ள அவரது வீட்டில் இன்று மதியம் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேரில் பார்த்த சாட்சியங்களின் அடிப்படையில் 2 பேர் அவரை சந்தித்து பேசியுள்ளனர். ஒருவர் காவித்துண்டு அணிந்திருக்கிறார். இன்னொருவர் தீபாவளி இனிப்புகளை கமலேஷிடன் வழங்கி பேசிக் கொண்டிருக்கிறார். 

அதன் பின் கமலேஷின் கழுத்தை அறுத்த இருவரும், அவரை பலமுறை துப்பாக்கியால் சுட்டனர். அதன் பின்னர் அவர்கள் தப்பியோடி விட்டனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த கமலேஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து விசாரிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக உத்தரப்பிரதேச காவல்துறை தலைவர் ஓ.பி.சிங் தெரிவித்துள்ளார். முதல்கட்ட தகவலின் அடிப்படையில் கொலை செய்தவர்கள் கமலேசுக்கு தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகின்றனர்.

ஏனென்றால் கொலை செய்வதற்கு முன்பாக கமலேசுடன் குற்றவாளிகள் 36 நிமிடங்கள் பேசியுள்ளனர். இந்நிலையில் குற்றவாளிகளை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். 

English Summary

Leader shot dead - Tension in UP

Latest Articles

KOLNews