KOLNews

பிரதமர் பாதுகாப்பு ..! - ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை.

அண்மையில் பிரதமர் மோதி தரை வழியாக பஞ்சாப் மாநிலம் செல்கையில், அங்கு வழியில் அவருக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக, உச்சநீதிமன்ற கண்காணிப்பில் உரிய விசாரணை நடத்தக்‍கோரி மனிந்தர் சிங் என்ற வழக்‍கறிஞர் மனு தாக்‍கல் செய்தார். 

அதையடுத்து, இவ்வழக்கு கடந்த 7-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்‍கு வந்த போது,  மத்திய அரசு மற்றும் பஞ்சாப் அரசின் வாதங்களைக்‍ கேட்ட நீதிபதிகள், முதற்கட்டமாக, பிரதமரின் பயண விபரங்களை சேகரித்து பாதுகாக்க, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற பதிவாளருக்‍கு உத்தரவிட்டனர். பஞ்சாப் அரசு, அம்மாநில காவல்துறை, சிறப்பு பாதுகாப்பு படை, மத்திய பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து தரப்பும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்‍க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

இந்நிலையில், நேற்று இந்த வழக்‍கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்‍கு வந்தது. அப்போது, பிரதமரின் பாதுகாப்பை தாங்கள் குறைத்து மதிப்பிடுவதாக எண்ணிவிட வேண்டாம் என நீதிபதிகள் தெரிவித்தனர். பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விசாரிக்‍க உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழுவை அமைக்‍க ஒப்புதல் தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பாக மத்திய அரசும், பஞ்சாப் அரசும் நடத்தி வரும் விசாரணையை நிறுத்தவும் உத்தரவிட்டனர்.

English Summary

Prime Minister's security ..! - Inquiry headed by a retired judge.

Latest Articles

KOLNews