KOLNews

விவசாயிகளுக்கு ஆதரவாக களம் இறங்கும் தி.மு.க...! - நாளை கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வழியாக நடைபெற்ற தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடந்தது  அதில் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது - 

அதன் சாராம்சம் - 

‘டெல்லி சலோ’ என்ற செயல் முழக்கத்துடன், பல மாநிலங்களிலிருந்து பல நூறு மைல் தூரத்தைக் கடந்து, நாட்டின் முதுகெலும்பான வேளாண்மையையும் பாதுகாத்திட டிராக்டர்களுடன் சென்று, தீரத்துடன் போராடி வருவது கண்டு பெரிதும் வியந்து, தி.மு.க. மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம், மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பது, ஜனநாயகத்திற்குக் கிடைத்திருக்கும் முதல் கட்ட வெற்றி என இக்கூட்டம் கருதுகிறது. இந்தியாவே இன்றைக்கு எழுந்து நின்று, இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் எதிர்த்து, டெல்லி செங்கோட்டை சிம்மாசனத்தில் வீற்றிருப்போரின் செவிகள் கிழியும் அளவிற்கு இடியென முழக்கமிட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த சட்டங்களுக்கு வக்காலத்து வாங்கும்  எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வை விட ஒரு படி மேலே சென்று ஆதரிக்கிறார்.

விவசாயிகளின் உணர்வு கொந்தளிப்பான வாழ்வுரிமைப் போராட்டத்திற்கு உரிய மதிப்பளித்து, மூன்று வேளாண் சட்டங்களையும் உடனடியாக மத்திய பா.ஜ.க. அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும்; தலைநகரம் டெல்லியில் தொடர்ந்து தொய்வின்றி நடைபெற்று வரும் விவசாயிகளின் மகத்தான போராட்டத்திற்கு உணர்வு பூர்வமான ஆதரவு தெரிவித்தும் வருகின்ற 5-ந்தேதி (நாளை) காலை 10 மணி அளவில் தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், தி.மு.க. சார்பில், கொரோனா கால முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைக் கடைப்பிடித்து, அற வழியில், ஜனநாயக முறையில், மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்புக் கொடி ஏந்தி, ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று, இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.

English Summary

DMK to take the field in support of farmers ...! - Black flag demonstration tomorrow

Latest Articles

KOLNews