KOLNews

காஷ்மீர் விவகாரத்தில் அரசு எடுத்த முடிவு..? - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடியின் விளக்க உரை..!

காஷ்மீர் மாநிலத்துக்கு விஷேச அந்தஸ்து நடைமுறையில் இருந்து வந்த நிலையில், அந்த மாநிலம் பிற மாநிலங்களுக்கு அல்லாத பல்வேறு சலுகைகளை பெற்றுவந்தது.

 இந்நிலையில், அம்மாநிலத்துக்காண  விஷேச அந்தஸ்திற்கு வகை செய்யும் சட்டப்பிரிவு 370 மற்றும் 35 ஏ ஆகியவற்றை மத்திய அரசு ரத்து செய்தது. இதற்கான உத்தரவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறப்பித்தார்.

மேலும்,அந்த மாநிலம் ஜம்மு-காஷ்மீர் எனவும், லடாக் எனவும் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இதில் ஜம்மு-காஷ்மீர் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கான மசோதாக்கள் எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்கு இடையே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன. அவற்றுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில் நாட்டு மக்களுக்கு நேற்று பிரதமற்ற மோடி உரையாற்றினார்...

அப்போது அவர் பேசுகையில், 

நாம் அனைவரும் ஒரு குடும்பமாக , முழு தேசமும் ஒருங்கிணைந்து எடுத்த சரித்திர முடிவு இது. இத்தனை ஆண்டுகளாக ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியில் நம்முடைய சகோதர, சகோதரிகள் வஞ்சிக்கப்பட்டு வந்தார்கள். இதுவரை அவர்களுடைய முன்னேற்றத்துக்கு இருந்து வந்த தடை இன்று நீக்கப்பட்டு உள்ளது.

சர்தார் வல்லபாய் பட்டேல், அண்ணல் அம்பேத்கர், டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி ஆகியோரின் கனவுகள் இன்று நனவாகி இருக்கின்றன. காஷ்மீரில் புதுயுகம் பிறந்து இருக்கிறது. ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கும் நாட்டு மக்களுக்கும் என் இதயபூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

370-வது பிரிவினால் ஜம்மு-காஷ்மீர், லடாக் மக்களுக்கு வாழ்க்கையில் என்ன பயன் கிடைத்து இருக்கிறது? அந்த பிரிவு குடும்ப அரசியல், பயங்கரவாதம், பிரிவினைவாதம் ஆகியவற்றை தவிர வேறு எதையும் கொடுக்கவில்லை. நம் தேசத்துக்கு எதிராக பாகிஸ்தான் அரசினால் ஒரு ஆயுதம் போல பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனால் இதுவரை 42 ஆயிரம் அப்பாவி மக்கள் உயிரிழந்து உள்ளனர்.

தற்போது இந்த பிரிவு நீக்கப்பட்டதால் இனி ஜம்மு-காஷ்மீர், லடாக் பகுதி மக்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். அவர்களுடைய எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கும். காஷ்மீர், லடாக்கை ஒருபோதும் விட்டு கொடுக்க மாட்டோம். மக்கள் அச்சமின்றி வாழும் சூழ்நிலையை உருவாக்குவோம்.

இதுவரை பல அரசுகள், நாடாளுமன்றத்தில் பல சட்டங்களை இயற்றி இருக்கின்றன. ஆனால் இதுவரை எந்த சட்டமும் காஷ்மீர் மக்களுக்கு எந்த பயனும் அளித்தது இல்லை. நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட எந்த சட்டமும் இந்த பகுதி மக்களுக்கு பொருந்தவில்லை. ஏறத்தாழ 1.5 கோடி மக்கள் இதுவரை விலக்கி வைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் வஞ்சிக்கப்பட்டு இருக்கிறார்கள்.நாட்டின் பிற பகுதிகளில் கல்வி உரிமை சட்டம் பயன் அளித்து உள்ளது. ஜம்மு-காஷ்மீர், லடாக் பகுதி மக்களுக்கு இது கிடைக்காமல் அப்பகுதி குழந்தைகள் வஞ்சிக்கப்பட்டு உள்ளனர்.

பிற மாநிலங்களில் பெண் உரிமை தொடர்பான சட்டங்கள் உண்டு. துப்புரவு பணியாளர்களை முன்னேற்றும் வகையில் சட்டம் உண்டு. பிற மாநிலங்களில் தலித் வன்கொடுமைக்கு எதிராக கடுமையான சட்டங்கள் உண்டு. சிறுபான்மையினரை பாதுகாக்கும் வகையில் சட்டங்கள் உண்டு. குறைந்தபட்ச ஊதிய சட்டம் உண்டு.ஆனால் ஜம்மு-காஷ்மீர், லடாக் பிரதேசத்தில் மட்டும் இவை எதுவுமே கிடையாது. இதனால் ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் இதுவரை துப்புரவு பணியாளர்களும் தலித்துகளும் சிறுபான்மையினரும் தொழிலாளர்களும் பெருமளவில் வஞ்சிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் தற்போது 370 மற்றும் 35ஏ பிரிவுகள் ரத்து செய்யப்பட்டு இருப்பதால், இனிமேல் ஜம்மு-காஷ்மீர், லடாக் பெருமளவில் முன்னேற்றம் காணும். அவர்களின் வாழ்வில் விளக்கேற்றி வைக்கப்படும். இப்போது புதிய அத்தியாயம் தொடங்கி இருக்கிறது.மத்திய அரசு பணியிலும் மத்திய போலீஸ் பணியிலும் வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் இனி ஜம்மு-காஷ்மீர் பிரதேசத்தின் போலீஸ் பணியாளர்களுக்கும் வழங்கப்படும். அவர்களுக்கு விடுமுறை பயண சலுகை, வீட்டு வாடகை சலுகை, குழந்தைகளின் கல்விக்கான சலுகை, சுகாதாரம் வசதிகள் ஆகிய அனைத்தும் வழங்கப்படும்.

அவர்களின் ஊதியமும் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்துக்கு இணையாக உயர்த்தப்படும். இதுவரை காலியாக இருந்த அனைத்து மாநில மற்றும் மத்திய அரசு பணியிடங்களும் நிரப்பப்படும்.

இதன் மூலம்  வேலைவாய்ப்பு அதிகரிக்கும். அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படும். இதுதவிர, இந்த பிரதேச இளைஞர்களுக்கு ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஆகியவற்றில் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.

இனி இப்பகுதிகள் நேரடியாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும். இதுவரை வளமை என்பது காகிதத்தில் பறந்து கொண்டிருந்தது. இப்போது இங்கு பூமியில் இறங்கி விட்டது.

இனி இங்கு ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ், நீர்ப்பாசனத்துறை, மின்துறை, ஊழல் தடுப்புப்பிரிவு ஆகியவை உருவாக்கப்படும். நாடாளுமன்றம், சட்டசபை, பஞ்சாயத்து ஆகியவற்றில் உங்கள் பிரதிநிதி உங்களால் அச்சுறுத்தல் இன்றி சுதந்திரமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்கள் உங்கள் பகுதியின் முன்னேற்றத்துக்கு பாடுபடுவார்கள்.

அதே போல், விரைவில் ஜம்மு-காஷ்மீர் சட்டசபைக்கு ஒளிவு மறைவற்ற முறையில், சுதந்திரமான தேர்தல் நடத்தப்படும்.

ரயில், விமானம், சாலை வசதிகள் மேம்படுத்தப்படும். பல ஆண்டுகளாக தடுத்து நிறுத்தப்பட்ட பல திட்டங்கள் இனி ஒவ்வொன்றாக அமல்படுத்தப்படும்.

நிலைமை சீரானதும் ஜம்மு- காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும். லடாக் யூனியன் பிரதேசமாக தொடர்ந்து நீடிக்கும்.

வரப்போகும் பக்ரீத் பண்டிகையை இப்பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடும் வகையில் இவர்களை வாழ்த்துவோம். இப்பகுதியை விட்டு நீங்கி நீண்ட காலமாக வெளிப்பகுதிகளில் தங்கி உள்ள அனைவரும் உங்கள் பிரதேசத்துக்கு திரும்புங்கள். உங்களுடன் இணைந்து புதிய பொலிவுடன் இப்பண்டிகையை கொண்டாட ஜம்மு-காஷ்மீர் இப்போது காத்து இருக்கிறது.

இப்பகுதி மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடும் வகையில் மத்திய அரசுஅனைத்து ஏற்பாடுகளும் செய்யும்.

இப்பகுதியின் வீரப்புதல்வர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக நாம் நினைவு கொள்வோம். கார்கில் உள்ளிட்ட பல போர்களில் தங்கள் இன்னுயிர் நீத்த இப்பகுதியின் வீரர்கள் பலர் அசோக சக்கர வீரவிருதினால் சிறப்பிக்கப்பட்டு உள்ளார்கள்.

இப்பகுதி மக்களின் வளர்ச்சிக்கு நாட்டின் அனைத்து சகோதர சகோதரிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஜம்மு-காஷ்மீர், லடாக் பகுதி மக்கள்அனைவரும் தங்களின் திறமையை உலகுக்கு காட்ட வேண்டும்.

என பிரதமர் மோடி கூறினார்.

English Summary

Government's decision on Kashmir issue .. PM Modi's speech to the nation

Latest Articles

KOLNews