KOLNews

கொரனாவை கையாளும் கேரளா..! - துவேஷ பிரச்சாரம் எடுபடுமா..?

கொரனா தொற்றின் உச்சத்தை நோக்கி நாடு பயணிப்பதாக பல நிபுணர்களை நம்ப ஆரம்பித்துள்ளனர்.

முன்னதாக இந்தியாவின் பிற மாநிலங்களை விட,  கேரளாவில் ஆரம்பத்திலேயே தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதற்கு அதன் முதல்வர் பினராயி எடுத்த முன்னெடுப்புகளின் பங்கு முக்கியமானது என்பது தெரிந்ததே..

குறிப்பாக, முக கவசங்கள், சானிடைசர்கள் போன்றவற்றை கேரளா அரசின் துணை நிறுவனத்தை கொண்டே தயாரித்து விளிம்பு நிலை மனிதனுக்கும் அவை சேருமாறு பார்த்து கொண்டது.

ஊரடங்கு அமுலில் இருந்தாலும் வருமானம் கருதி அக்கம் பக்கத்தில் உள்ள வேலைகளை தேடி சாமானியர்கள் சென்று, அதன் மூலம் தொற்று பரவல் அதிகமாக கூடாது என்பதற்காக,  நியாமான அளவிலான அத்தியாவசிய பொருட்களை அவர்களுக்கு வழங்கியது, போன்றவற்றை குறிப்பிடலாம்.

இதனால் ஏற்பட்ட முன்னேற்றம் நடுநிலையாளர்களால் பாராட்டப்பட்டாலும், அது கம்யூனிச சித்தாந்தத்தின் வெற்றியாக மாறிவிடக்கூடாது என்கிற முனைப்பு பல வலதுசாரி சிந்தனையாளர்களிடம் இருந்தது.

இந்நிலையில்,  மே மாத தொடக்கத்தில்  குறைவாக இருந்த கொரோனா வைரஸ் பாதிப்புகள். தற்போது ஒப்பீட்டளவில் அதிகரித்துள்ளன. சமீபத்திய புள்ளிவிவரங்களின் படி, கேரளாவில் 359 கொரோனா பாதிப்புகள் உள்ளன, மேலும் மொத்த கண்காணிப்பின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. திங்களன்று கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 62 வயது பெண் ஒருவர் இறந்ததையடுத்து கேரளாவில் மொத்த இறப்பு எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

அதே போல, இன்று ஒரே நாளில் கேரளாவில் 67-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இந்த போக்கை எதிர்பார்த்ததாகக் கூறினாலும் தற்போதைய உயர்வு உடனடி சமூகம் பரவுவதற்கான வாய்ப்பைக் குறிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் நம்புகின்றனர்.

இது கவலை தரும் விஷயம் தான் என்பதில் மாற்றமில்லை. இருப்பினும் இன்று உறுதிசெய்யப்பட்ட 67 பேரில், 27 பேர் வெளிநாடுகளில் இருந்து கேரளா திரும்பியவர்கள். 15 பேர் மராட்டியத்தில் இருந்தும் 9 பேர்  தமிழகத்தில் இருந்தும், 5 பேர் குஜராத்தில் இருந்தும் வந்தவர்கள் என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.

ஆக, பாரம்பரிய மருத்துவத்தை இன்னும் கடைபிடிக்கும் வாழ்வியல் முறையும், மாநில அரசின் நிர்வாக திறனும் இன்னும் கேரளா மக்களை கைவிடவில்லை. அதற்குள் கொரானாவுக்கான கேரள மாடல் தோல்வி என்கிற வகையில் எழும் குரல்களின் நோக்கம் வெறும் காழ்புணர்ச்சியே அன்றி வேறில்லை.

இன்றைய சூழலில், சமூக இடைவெளி, முகக்கவசம் உள்ளிட்ட கொரோனா முன்னெச்சரிக்கை விதிகளை பின்பற்றி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கி நடத்தும் நிலையில் உள்ள ஒரே அரசாக கேரள அரசு இருக்கிறது என்பதை விமர்சிப்பவர்கள் கருத்தில் கொள்ளவேண்டும்.

English Summary

Kerala handling Corona..! - Will the false propaganda be taken ..?

Latest Articles

KOLNews