KOLNews

திமுக-காங்கிரசில் மட்டுமல்ல.. அதிமுக-பாஜக கூட்டணியிலும் சலசலப்பு..!

ஒரு பக்கம்,திமுக - காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு என்றால், மறுபுறம் அதிமுக -பாஜக கூட்டணியும் பெரிதாக சொல்லிக்கொள்ளும் நிலையில் இல்லை.

அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்து  பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், பா.ஜ., தனித்து போட்டியிட்டிருந்தால், அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கும். நாங்கள் அதிக இடங்களில் போட்டியிட்டு இருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். கூட்டணியில் இடம்பெற்றிருந்ததால், நாங்கள் போட்டியிட விரும்பிய அளவிற்கான பதவி, இடங்கள் கிடைக்கவில்லை என தெரிவித்து பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போட்டார்.

அதற்கு எதிர்வினை ஆற்றும் வகையில், அமைச்சர் ராஜேந்திரபாலாஜி , 'அனைத்து கட்சிகளுமே தனித்து போட்டியிட வேண்டும். அப்போது தான் ஒவ்வொரு கட்சியின் தனி பலம் தெரியவரும்' என்றார்.

அத்துடன் அமைச்சர் ஜெயக்குமாரும் தன் பங்கிற்கு, , பொன்ராதாகிருஷ்ணன் கருத்து, அவருடைய கருத்தா? கட்சியின் கருத்தா? என்று தெரியவில்லை. எங்களை பொறுத்தவரையில் கூட்டணியில் இருந்து கொண்டு இதுபோல பேசுவது கூட்டணி தர்மத்திற்கு அழகல்ல' என்று போகிற போக்கில் சொல்லிவிட்டார்.

இதற்கிடையே, அரியலூரில் நடந்த நிகழ்ச்சிக்கு பின் மீண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், சிறுபான்மையினர் ஓட்டுக்காக அரசியல்வாதிகள் கீழ்த்தரமான வேலையை செய்ய துவங்கியிருக்கின்றனர். திமுக கூட்டணி கட்சிகளோடு பயங்கரவாதிகள் கூட்டணி வைத்திருக்கிறார்கள். இதற்கு திமுக விளக்கம் அளிக்க வேண்டும்.

பயங்கரவாதிகளின் கூடாரமாக தமிழகம் மாறிவிட்டது என்பதை ஜெயலலிதா ஆட்சி காலத்திலிருந்தே கூறி வருகிறேன். கேரளா, குஜராத், டில்லி, தமிழகம் உள்ளிட்ட பல இடங்களில் தமிழகத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளது எனது கருத்தை உறுதிப்படுத்தியுள்ளது. இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது..? என கேள்வி எழுப்பி அதிமுகவின் நிர்வாக திறனை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்

இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், 'தாம் சார்ந்த கட்சியில் பதவி கிடைக்காத கோபத்தை எங்கள் மீது பொன்.ராதாகிருஷ்ணன் திருப்புவது ஏன்? மத்திய அமைச்சராக இருந்த அவர், தமிழகத்திற்கு என்ன திட்டங்களை கொண்டு வந்தார். சட்டம் ஒழுங்கு உட்பட பல்வேறு துறைகளில் தமிழகம் சிறந்து விளங்குகிறது.

தமிழகத்திற்கு மத்திய அரசு விருதுகள் அளித்து வரும் நிலையில், அவரின் கருத்து ஏற்புடையது அல்ல. மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர், தமிழக அரசு நிர்வாகத்தை பாராட்டும் நிலையில், தவறான கருத்துகள் மூலம் பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய பாஜக அரசை எதிர்க்கிறாரா? எனக் கேள்வி எழுப்பினார்.

தேர்தலுக்காக கூட்டணி வைத்துவிட்டு பின் அடித்துக்கொள்வதும், பின் தேர்தல் அருகாமையில் வரும் போது கட்டித்தழுவுவதும் வாடிக்கையான விஷயம் என்றாலும், மக்கள் முன் புதிய கட்சிகள் கடை விரிக்கும் நிலையில், பிரதான கட்சிகளிடையே நிலவும் பூசல் மக்களை திசை திருப்பிவிடும் என அடிமட்ட தொண்டர்கள் புலம்புகிறார்கள்.

English Summary

Not only in the DMK-Congress .. Also in ADMK-BJP alliance ..

Latest Articles

KOLNews