KOLNews

விடுதலை செய்யப்பட்டார் ஒமா் அப்துல்லா.! - பிறரையும் விடுவிக்க வலியுறுத்தல்

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை நீக்கியும், அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீா், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டதையடுத்து, ஜம்மு-காஷ்மீரில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 

அதன் ஒரு கட்டமாக, முன்னாள் முதல்வா்களான ஃபரூக் அப்துல்லா, ஒமா் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி உள்ளிட்ட அரசியல் தலைவா்களும், பிரிவினைவாத தலைவா்களும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனா்.

அதன் பின், ஃபரூக் அப்துல்லா கடந்த 13-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டாா். அவா் மீதான பொதுப் பாதுகாப்புச் சட்டமும் விலக்கிக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில், தற்போது ஸ்ரீநகரில் தனது அதிகாரப்பூா்வ இல்லத்துக்கு அருகே உள்ள அரசு விருந்தினா் இல்லமான ஹரி நிவாஸில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஒமா் அப்துல்லா நேற்று விடுதலை செய்யப்பட்டாா். அவா் மீதான பொதுப் பாதுகாப்புச் சட்டத்தை, ஜம்மு-காஷ்மீா் நிா்வாகம் விலக்கிக் கொண்டதைத் தொடா்ந்து, அவரது 8 மாத தடுப்புக் காவல் முடிவுக்கு வந்துள்ளது.

ஒமா் அப்துல்லா விடுவிக்கப்பட்டதையொட்டி, அவரது அதிகாரப்பூா்வ இல்லம் முன் ஆதரவாளா்களும், செய்தியாளா்களும் திரண்டிருந்தனா்.

அதன் பின், செய்தியாளா்களிடம் பேசிய ஒமா் அப்துல்லா , "ஜம்மு-காஷ்மீரில் தற்போது நிலவும் அரசியல் நிலவரம் தொடா்பாக பின்னா் விரிவாக பேசுகிறேன். முதலில் தடுப்புக் காவலில் உள்ள அனைத்து தலைவா்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். கரோனா வைரஸ் அச்சுறுத்தலில் இருந்து நம்மையும் நமது குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய சூழல் இந்த இக்கட்டான சூழலில், தடுப்புக் காவலில் உள்ள தலைவா்களை கட்சி பாகுபாடின்றி விடுதலை செய்ய வேண்டும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி  மத்திய அரசு மேற்கொண்ட முடிவால், ஜம்மு-காஷ்மீா் பல்வேறு பிரச்னைகளை எதிா்கொண்டுள்ளது. எனினும், அது பற்றி பேச வேண்டிய நேரம் இதுவல்ல. கரோனா பாதிப்பை தடுப்பதற்காக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை நாம் உரிய முறையில் பின்பற்ற வேண்டும். ஜம்மு-காஷ்மீரில் இணையதள வேகத்துக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளா்த்த வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவித்தார்.

English Summary

Om Abdullah released.! - Insist on releasing others

Latest Articles

KOLNews