KOLNews

காங்கிரசில் மாற்றுக்கருத்து..! - 'லடாக்' யூனியன் பிரதேசமாவது ..'ஓகே' என்கிறார் மூத்த தலைவர் கரண் சிங்..!

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், ஜம்மு-காஷ்மீர் மாநில மகாராஜாவான மறைந்த ஹரி சிங்கின் மகனுமான டாக்டர் கரண் சிங், ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதி யூனியன் பிரதேசமாக உருவாவது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று என்று கருத்து தெரிவித்துள்ளார். 

முன்னதாக காங்கிரஸ் செயற் குழு, ஜம்மு -காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட  சிறப்பு அந்தஸ்தை நீக்கியும், அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தும் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், கரண் சிங் இந்த அறிக்கையை வெளியிட்டு காங்கிரசை தர்மசங்கடத்துக்கு உள்ளாகியுளார்.

அதே நேரத்தில் , சிறப்புச் சட்டப் பிரிவு "370' குறித்து நேரடியாக அவர் கருத்து ஏதும் கூறவில்லை. மாநிலங்களவை முன்னாள் உறுப்பினரான கரண் சிங், தில்லியில் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது...

பாராளுமன்றத்தில் நடைமுறைக்கு மாறாக விரைந்து எடுக்கப்பட்ட முடிவுகள் நம்மை எல்லோரையும் முற்றிலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதையும், பல நிலைகளில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதையும் ஒப்புக் கொள்கிறேன். இந்த நடவடிக்கைக்கு நாடாளுமன்றம், ஜம்மு மற்றும் லடாக் உள்பட நாட்டைச் சுற்றி உள்ளவர்களின் ஆதரவு அதிகம் இருப்பதாகத் தெரிகிறது. தனிப்பட்ட முறையில் இந்த நிகழ்வுகள் கண்டிக்கத்தக்கவை என்பதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. இதில் பல ஆக்கபூர்வமான விஷயங்களும் உள்ளன. லடாக் பகுதி யூனியன் பிரதேசமாக உருவாவது வரவேற்க கூடியது.

1965-இல் இந்த ஆலோசனையையும், மாநிலத்தை மறுசீரமைக்கும் முன்மொழிவையும் வெளிப்படையாகக் கூறியிருந்தேன். சட்டப் பிரிவு 35 ஏ-இல் உள்ள பாலின முரண்பாடு தீர்க்கப்பட வேண்டியது அவசியம். மேலும், மேற்கு பாகிஸ்தான் அகதிகளை விடுவிப்பது, பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு ஆகியவையும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. மாநிலத்தை இரண்டாகப் பிரிப்பது என்பது எதிர்காலத்தில் மறுவரையறை இருக்கும் என்பதன் அர்த்தமாகும். முதல் முறையாக இருக்கப் போகும் இந்த மறுவரையறை ஜம்மு - காஷ்மீர் பிராந்தியங்கள் இடையே அரசியல் அதிகாரத்தை நியாயமாகப் பிரிப்பதை உறுதிப்படுத்தும்.

அரசியல் பேச்சுவார்த்தை அவசியம்: காஷ்மீரைப் பொருத்தமட்டில் அங்குள்ள மக்கள் பலரும் தாங்கள் தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக உணரலாம். எனவே, அரசியல் பேச்சுவார்த்தை தொடர்வது அவசியம் என உணர்கிறேன். பிரதான இரு பிராந்தியக் கட்சிகளை தேச விரோதிகள் என நிராகரிப்பது நியாயமற்றது. காஷ்மீரில் உள்ள சட்டப்பூர்வ அரசியல் கட்சிகளின் தலைவர்களை விடுவிக்கவும், அவர்களுடன் அரசியல் சார்ந்த பேச்சுவார்த்தையைத் தொடங்கவும் நான் கேட்டுக் கொள்கிறேன். ஜம்மு - காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்தை மீட்டெடுக்கச் செய்வதற்கான முயற்சிகளை முடிந்தவரை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் மக்கள் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள அரசியல் உரிமைகளை குறைந்தபட்சம் அனுபவிக்க முடியும். ஜம்மு - காஷ்மீர் மாநிலம் என்னுடைய மூதாதையர்களால் நிறுவப்பட்டது. அதற்காக 1947-இல் எனது தந்தை இந்தியாவுடன் உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். 

என்னுடைய முழு அக்கறையும் மாநிலத்தின் அனைத்துப் பிரிவு மக்களின் நலத்தைக் கொண்டதாகும் .

காஷ்மீர் மாநிலத்தின் முதல் மற்றும் கடைசி சதர்-இ-ரியாஸத்தாக இருந்த இவர், காஷ்மீரில் அரசியல் விவாதம் நடத்துவதற்காக அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English Summary

Opinion differ in Congress ..! - Karan singh welcomes Ladakh as Union Territory.

Latest Articles

KOLNews