வன்னிய சமூகத்தினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்த சென்னை நோக்கி வந்த பா.ம.க.-வினர் பல இடங்களில் சாலை தடுப்புகளை சேதப்படுத்தினர். சென்னை நோக்கி வரும் ரயில்கள் மீதும் கல்வீசி தாக்கி வன்முறையில் ஈடுபட்டதால் ஆங்காங்கே ரயில்கள் நிறுத்தப்பட்டன.
முன்னதாக இடஒதுக்கீடு கேட்டு பா.ம.க.வினர் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டத்திற்கு திட்டமிட்டிருந்தனர். இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை வந்த அவர்கள், ஆங்காங்கே சாலை மறியல் செய்து தடுப்புகளை சேதப்படுத்தினர்.

குறிப்பாக, தாம்பரம் இரும்புலியூர் பகுதியில் ஒன்றுதிரண்ட அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்திய போது அங்கு சாலை மறியலில் ஈடுபட்ட அவர்கள் சாலை தடுப்புகள் மற்றும் அங்கிருந்த பொருட்களையும் அடித்து சேதப்படுத்தினர். இதனால் ஒரு மணி நேரமாக கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திடீரென தாம்பரம் ரயில் நிலையத்திற்கு சென்று அங்கும் திடீர் மறியலில் ஈடுபட்டதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதையடுத்து போலீசாருக்கும், பா.ம.க.வினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானதால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இதேபோல் மேலும் சில பகுதிகளிலும் பா.ம.க.வினரின் மறியலால் பொதுமக்கள் அவதிக்கு ஆளானார்கள். மறியலை தொடர்ந்து அவர்கள் பல இடங்களில் ரயில்கள் மீது கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் தாம்பரத்திலிருந்து சென்னை நோக்கி புறநகர் ரயில்கள் மற்றும் வெளியூரிலிருந்து வரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் பொதுமக்களும் அதிகம் சிரமத்துக்கு உள்ளாகினர்.
English Summary
PMK protest demanding 20 percent reservation ..! - Stone throwed on trains ..!