KOLNews

தலைகுனிவு..! - பெண் ஊராட்சி தலைவர், தரையில் அமர வைக்கப்பட்ட சம்பவம் குறித்து ஸ்டாலின் வேதனை

பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண் ஊராட்சி தலைவர், ஊராட்சி மன்ற கூட்டத்தில் தரையில் அமர வைக்கப் பட்ட சம்பவம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

முன்னதாக இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  'சிதம்பரம் அருகில் தெற்குத்திட்டை ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி இராஜேஸ்வரி, ஊராட்சி மன்றக் கூட்டத்தில் தரையில் அமர வைக்கப்பட்டதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். ஜனநாயக நெறிகளையொட்டி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஊராட்சி மன்ற தலைவர் தரையில் அமர்ந்திருக்கும் அந்த படம், பொதுவாழ்வில் இருக்கும் நம் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டுள்ள தலைகுனிவு.

சமத்துவத்திற்கு ஜனநாயகத்திற்கு எதிரான இதுபோன்ற இழி செயலில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும், என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த காலத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவருக்கு இது மாதிரியான அவமரியாதைகள் நடக்கக்கூடாது என்று கண்டிப்பாக உத்தரவுகளை பிறப்பித்து இருந்தேன். ஆகவே பட்டியலினத்தவர் பழங்குடியினரும் அதிகாரத்தில் பங்கேற்று மக்கள் பணி ஆற்றிட வேண்டும், மாநிலத்தின் முன்னேற்றத்தை ஒரு நாட்டின் வளர்ச்சியில் முனைப்புடன் உரிமையுடன் ஈடுபட வேண்டும் என்பதில் திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்குமே உறுதியுடன் இருக்கிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர் ஒருவருக்கு ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்வு, சமூக நீதி போற்றும் தமிழ் மண்ணுக்கும் அவமானம் . ஆகவே இனி எந்த ஊராட்சியிலும் இதுபோன்ற அவமரியாதை நடக்கக்கூடாது. அதிமுக அரசு அதனை அணுவளவும் அனுமதிக்கவும் கூடாது என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார் ஸ்டாலின் 

English Summary

Shame..! - Stalin's pain over the incident in which a female panchayat leader was seated on the ground

Latest Articles

KOLNews