KOLNews

தமிழ் அடையாளங்களை திருடி திராவிடம் என அடையாளப்படுத்துவதா..? - கொதிநிலையில் சீமான்..!

அண்மையில், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை 'திராவிடக் களஞ்சியம்' என்ற தனி நூல் வெளியிடப்படும் என பேரவையில் அறிவித்தது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதன் சாராம்சம் - 

தமிழ் நூல்களைத் தொகுத்து , அவற்றை ' திராவிடக்களஞ்சியம் ' என அடையாளப்படுத்தப்போவதாக அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது .

தமிழர்களின் மொழி , இனம் , நிலம் , கலை , இலக்கியம் , பண்பாடு , வரலாறு , நாகரிகம் தொடர்பான தொன்ம அடையாளங்கள் யாவற்றையும் அழித்து , அவற்றின் மீது திராவிட முத்திரை குத்தியதாக  அமையும் . 

 ஆங்கிலேயர்கள் எப்படித் தங்கள் உச்சரிப்புக்கு ஏற்றவாறு தமிழக ஊர்களின் பெயர்களை மாற்றினார்களோ , அப்படித்தான் ஆரியர்கள் கையாண்ட திராவிட உச்சரிப்பும் . அதுவும் விந்திய மலைக்குத் தெற்கே வாழ்ந்த ஆரியர்களைக் குறிக்கவே திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத்தினர் . எனவே , சொல்லளவில் பார்த்தாலும் , பொருளளவில் பார்த்தாலும் திராவிடம் என்பது தமிழருக்கு எதிரானதேயாகும் .

நீதிக்கட்சியின் பெயரைத் திராவிடர் கழகம் என்று மாற்றியபோதே அதற்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து கி.ஆ.பெ விசுவநாதம் , அண்ணல் தங்கோ உள்ளிட்ட தமிழினத் தலைவர்கள் , ' தமிழர் கழகம் ' என்று பெயர் மாற்ற வலியுறுத்தி உரிமைக் குரல் எழுப்பினர் . ஆனால் , நீதிக்கட்சியில் பிற மொழியாளர்கள் ஆதிக்கம் அதிகமிருந்த அந்தக் காலத்தில் தமிழர்களின் உரிமைக் குரல் எடுபடாமல் போனது . ஒரு குறிப்பிட்ட சிலரின் வாழ்வுக்கும் , வளத்திற்கும் பல்லாயிரம் ஆண்டுகாலமாகத் தொடர்ந்துவரும் ஒரு தேசிய இனத்தின் அடையாளத்தையே மாற்றுவதென்பது தமிழ் மண்ணிற்கும் , இனத்திற்கும் செய்கிற பச்சைத் துரோகமாகும் . 

தமிழர்கள் இன உணர்ச்சியை அடைய விடாது தடுத்துக்கெடுத்ததில் திராவிட மறைப்புகளுக்கு முதன்மைப் பங்குண்டு . தமிழ் தமிழர் , தமிழர் நாடு என உச்சரிக்கத் தவறி , அடையாளத்தைத் தொலைத்து , இன உணர்வை இழந்ததால் , இனப் படுகொலையையே சகித்துக்கொள்ளும் அளவுக்குப் பேரிழப்பில் தமிழர்களைக் கொண்டுபோய் நிறுத்தியது . 

தமிழ் , தமிழர் , தமிழ்நாடு என்பதற்கான சான்றுகள் சங்கத்தமிழ் இலக்கியங்கள் முழுதும் விரவிக் கிடக்கிறது . ஆனால் , திராவிடம் என்பதற்கான சான்றுகள் எதுவும் சங்கத் தமிழ் இலக்கியங்களிலோ , காப்பியங்களிலோ இல்லை என்பது மறுக்கவியலா பேருண்மையாகும் . திராவிடத்திற்கான மூலச்சான்றுகள் கற்பனைத் திணிப்புகளாகவும் , தமிழர்களல்லாத அந்நியர்களின் கூற்றுகளாகவும் , சம்ஸ்கிருத மொழி இலக்கியங்களாகவும் உள்ளன . 

 திராவிடம் , திராவிடர் எனும் சொல்லாடல்களுக்கு முதலில் திமுக அரசு விளக்கமளிக்க முன்வர வேண்டும் . தமிழகத்திலுள்ள ஒருசில திராவிட அரசியல்வாதிகளைத் தவிர , எந்தத் தென்மாநில மக்கள் தங்களைத் திராவிடர்கள் என்று ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளனர் என்பதையும் , எந்தச் சங்கத்தமிழ் இலக்கியத்தில் திராவிடம் என்பதற்கான சான்றுகள் உள்ளன என்பதையும் ஆளும் திமுக அரசு தெளிவுபடுத்தட்டும் . 

அந்நியர்கள் தமிழர் நிலத்தில் ஆளுகை செய்யவும் , அதிகாரம் செலுத்தி தமிழர்களை அடிமைப்படுத்தவும் தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட அரசியல் விலங்குதான் திராவிடமாகும் . அடிப்படையில் , திராவிடர்கள் எனக் கூறப்படுவோருக்கு தனித்த அடையாளங்கள் ஏதுமில்லாததால் , தமிழர்களின் மொழி , இன , தேச , பண்பாட்டு , வரலாற்று அடையாளங்களைத் திருடித் தன்வயப்படுத்துகிற சூழ்ச்சியை மேற்கொள்கின்றனர் . தற்போதைய செயல்பாடும் அதன் நீட்சியேயாகும் . மொத்தத்தில் , தமிழர்களை திராவிடர்கள் எனத் தவறாக அடையாளப்படுத்தியது ஒரு வரலாற்றுப்பேரவலமாகும் . எனவே , தமிழ் நூல்களின் தொகுப்பிற்கு , ' தமிழ்க்களஞ்சியம் ' என்றே திமுக அரசு பெயர் சூட்டவேண்டுமென வலியுறுத்துகிறேன் . 

English Summary

Stealing Tamil identities and identifying them as Dravida ..? - Boiling Seaman ..!

Latest Articles

KOLNews