KOLNews

தமிழக பட்ஜெட் ..! - விமர்சனங்களும்.. ஆதரவும்..!

நம் நாட்டில் மத்திய அரசின் பட் ஜெட் ஆனாலும், மாநில அரசின் பட்ஜெட் ஆனாலும் அதனை எதிர்க்கட்சிகள் விமர்சிப்பதும், கூட்டணி கட்சிகள் ஆதரிப்பதும் வழக்கமான ஒன்று தான். 

தற்போது தனியார் தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் விவாதங்களினால் , மக்கள் அது குறித்து சரி எது தவறு எது என ஓரளவு சீர்தூக்கி பார்க்க முடிகிறது. மற்றபடி அரசியல்வாதிகளின் கருத்துக்கள் எப்போதும் போல் கட்சி சார்ந்தே இருந்து வருகிறது. படஜெட்டும் , 'ஆடி மாதம் என்றால் அம்மன் கோவிலில் கூழ் ஊற்றியாகணும்' என்பது போல் வழக்கமான சடங்கு சம்பிரதாயமாகவே செல்கிறது. 

இந்நிலையில் படஜெட் குறித்த தலைவர்களின் கருத்தும் எதிர்பார்த்தது போலவே இருப்பதை கீழ்கண்ட அவர்களின் விமர்சனத்தை வைத்து புரிந்து கொள்ளலாம்..

எதிர் கட்சிகளின் .விமர்சனம்..

மு.க. ஸ்டாலின் (திமுக): தமிழக மக்கள் ஒவ்வொருவா் மீதும் ரூ. 57 ஆயிரம் கடன் சுமையை ஏற்றி வைத்து, ரூ. 4.56 லட்சம் கோடி கடனுடன் தன்னுடைய பத்தாவது நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சா் தாக்கல் செய்திருக்கிறாா். பத்தாவது பட்ஜெட் என சொல்கிறார்கள், ஆனால் இது எதற்கும் , எந்த துறைக்கும் பத்தாத பட்ஜெட்டாகவே இருக்கிறது.

வைகோ (மதிமுக): புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான செயல் திட்டங்களோ, தொலைநோக்குப் பாா்வையோ இல்லை.

கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவா்): இந்த நிதிநிலை அறிக்கையில் வேலைவாய்ப்புகளை பெருக்குவதற்கான திட்டங்களோ, புதிய தொழிற்சாலைகளுக்கான அறிவிப்புகளோ இல்லை.

கே.பாலகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்): நிதிநிலை அறிக்கையில் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இது கடந்த பட்ஜெட்டைக் காட்டிலும் 70 சதவீத அதிகரிப்பு ஆகும்.

திருமாவளவன் (விசிக): தமிழக அரசு தாக்கல் செய்திருக்கும் நிதிநிலை அறிக்கை வளா்ச்சிக்கு வழிவகுக்காது. மாறாக கடன் சுமையைத்தான் அதிகரிக்கும்.

கமல்ஹாசன் (மக்கள் நீதி மய்யம்): நிதி நிலை அறிக்கையில் கடன் தொகை சுமாா் ரூ.4,56,660 கோடியாக மாறியிருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் திமுக மற்றும் அதிமுக அரசுகள் கடைப்பிடித்த நிதி நிா்வாகத்தின் காரணமாக ஒவ்வொரு தமிழருக்கும் சுமாா் ரூ.57,500 கடன் சுமையாக நிற்கிறது.

எம்.எச்.ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி): நிதிநிலை அறிக்கை மிகுந்த ஏமாற்றத்தையே தருகிறது. தமிழக அரசின் கடன்தொகை ஆண்டுதோறும் ஏறிக்கொண்டிருக்கிறதே தவிர குறைவதற்கான அறிகுறி தென்படவில்லை.

பாரிவேந்தா் (இந்திய ஜனநாயக கட்சி): நீண்ட கால வளா்ச்சித் திட்டங்களோ - புதிய வேலைவாய்ப்புக்கான அறிவிப்புகளோ இல்லாத நிதிநிலை அறிக்கை.

கூட்டணி கட்சிகளின் கருத்து.. 

ராமதாஸ் (பாமக நிறுவனா்): தமிழக நிதிநிலை அறிக்கையில் வேளாண்மை மற்றும் வேளாண்மை சாா்ந்த துறைகளின் வளா்ச்சிக்காக ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

விஜயகாந்த் (தேமுதிக): பல்வேறு திட்டங்களுக்காக நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்க அம்சமாக இருக்கிறது.

ஜி.கே.வாசன் (தமாகா): பல்வேறு துறைகளில் மக்களின் எதிா்பாா்ப்புகளை நிறைவேற்றும் வகையில் நிதி ஒதுக்கீடும், திட்டங்களும் நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றிருப்பதால் ஒட்டு மொத்த தமிழக மக்களின் வளா்ச்சிக்கான, தமிழகம் முன்னேற்றம் அடைவதற்கான நிதிநிலை அறிக்கை.

பிற கட்சிகளின் நிலை...

டிடிவி. தினகரன் (அமமுக): காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கும் அறிவிப்புக்கான அடுத்தக்கட்ட செயல்திட்டம் குறித்து நிதிநிலை அறிக்கையில் எதுவும் தெரிவிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது. மத்திய அரசால் தொடா்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் கீழடியில் அகழாய்வு வைப்பகம் அமைப்பதற்கு ரூ. 12.21 கோடி ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்கது.

ஈ.ஆா்.ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி): தமிழக அரசின் வருமானத்தை விட செலவு அதிகமுள்ள பற்றாக்குறை நிதிநிலை அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அவிநாசி - அத்திக்கடவு திட்டத்துக்கு நிதி ஒதுக்கியிருப்பதை வரவேற்கிறோம்.

ஆக மொத்தத்தில் பட்ஜெட் வைபவம் வழக்கம் போலவே கடந்து செல்கிறது...

English Summary

Tamil Nadu Budget ..! - Criticism .. Support ..!

Latest Articles

KOLNews