KOLNews

"ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு" திட்டதிலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க முடியாது..! - ராம்விலாஸ் பஸ்வான்

 மத்திய அரசு, நாடு முழுவதும் ஒரே ரேஷன் கார்டை பயன்படுத்தி ரேஷன் பொருட்கள் வாங்கும் வகையில் ‘ஒரு நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை கொண்டு வந்துள்ள நிலையில், முதற்கட்டமாக நேற்று 4 மாநிலங்களில் இத்திட்டத்தை மத்திய உணவு மற்றும் பொது வினியோகத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் தொடங்கிவைத்தார். அதன்படி ஆந்திரா-தெலுங்கானா மற்றும் குஜராத்-மராட்டியம் மாநிலங்களுக்கு இடையே பொருட்கள் வாங்கிக்கொள்ளும் திட்டம் தொடங்கப்பட்டது.

இதனால் ஆந்திரா மக்கள் தங்கள் மாநிலத்தின் எந்த பகுதியிலோ அல்லது தெலுங்கானாவிலோ பொருட்கள் வாங்க முடியும். அதே போல தெலுங்கானா மக்களும் தங்கள் மாநிலத்தின் எந்த பகுதியிலோ அல்லது ஆந்திராவிலோ பொருட்கள் வாங்கலாம். இதைப்போல குஜராத், மராட்டிய மக்களும் தங்கள் மாநிலங்களுக்குள் பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம்.

அதைத்தொடர்ந்து அரியானா, ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், திரிபுரா ஆகிய 7 மாநிலங்களில் இந்த திட்டம் அறிமுகமாகி இருக்கிறது. தற்போது இந்த மாநில மக்கள் தங்கள் மாநிலத்துக்குள் எந்த பகுதியிலும் பொருட்கள் வாங்குவதற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது.

மேற்படி 11 மாநிலங்களும் தங்களுக்குள்ளே எந்த மாநிலத்திலும் பொருட்களை வாங்கிக்கொள்ளும் வகையில் திட்டம் விரிவுபடுத்தப்படும். இந்த நடவடிக்கை அடுத்த 2020 ஜனவரிக்குள் அமலில் வரும் என மத்திய உணவுத்துறை செயலாளர் ரவி காந்த் தெரிவித்தார்.

முன்னதாக ஆந்திரா-தெலுங்கானா மற்றும் குஜராத்-மராட்டியம் மாநிலங்களுக்கு இடையேயான ரேஷன் திட்டத்தை தொடங்கி வைத்தபின் ராம்விலாஸ் பஸ்வான் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘இன்று (நேற்று) ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தினம். தலா 2 மாநிலங்களுக்கு இடையேயான ரேஷன் கார்டு திட்டத்தை தொடங்கி இருக்கிறோம். அடுத்த ஆண்டு ஜூன் 1-ந் தேதிக்குள் அனைத்து மாநிலங்களையும் திட்டத்தில் சேர்த்து தேசிய அளவில் முழுமையாக செயல்படுத்தப்படும்’,

மேலும்,இந்த திட்டத்துக்கான உணவு பொருள் கையிருப்பை எவ்வாறு பராமரிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. எனெனில் இந்திய உணவு கழகத்தின் குடோன்கள் அனைத்தும் போதுமான கொள்ளளவுடன் இருப்பதுடன், கூடுதலாக 3 மாதங்களுக்கு தேவையான கூடுதல் பொருட்களை இருப்பு வைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறது’ என்று கூறினார்.

அப்போது, மத்திய அரசின் ‘ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்துக்கு தமிழகத்தில் எதிர்ப்பு காணப்படுகிறது. எனவே இந்த திட்டத்தில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்படுமா? என ராம்விலாஸ் பஸ்வானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் , “இந்த திட்டத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க முடியாது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்களுக்கும் இந்த திட்டம் பொருந்தும்” என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.

English Summary

Tamil Nadu cannot exempt from the "One Country, One Ration Card" scheme! - Ramvilas Paswan

Latest Articles

KOLNews