KOLNews

ஹிந்துக்களின் நம்பிக்கை ஒன்றே போதுமானது..! - அயோத்தி வழக்கில் ராம் லல்லா விராஜ்மான் அமைப்பு வாதம்...!

காஷ்மீருக்கான விஷேச அந்தஸ்த்தை ரத்து செய்தது போல், பாஜக,ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து அமைப்புகளின் நீண்ட நாள் கோரிக்கையான அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் திட்டமும் அடுத்து செயல்படுத்தப்படும் என பாஜக அபிமானிகள் சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்டுவரும் நிலையில், தற்போது ராமர் கோவில் விவகாரம் மீண்டும் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது. 

இந்நிலையில், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய அந்த இடத்தில் ராமர் கோயில் இருந்ததற்குப் போதுமான ஆதாரங்கள் உள்ளதா ? என்று.ராம் லல்லா விராஜ்மான் அமைப்பிடம் உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பியது.

முன்னதாக உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியிலுள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கின் 5-ஆவது நாள் விசாரணை, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல்சாசன அமர்வு முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

விசாரணையின் போது , அயோத்தியில் மசூதி கட்டப்பட்ட இடத்தில், ராமர் கோயில் இருந்ததற்கு ஆதாரம் உள்ளதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

இதற்கு பதில் அளிக்கும் வகையில், ராம் லல்லா விராஜ்மான் அமைப்பு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சி.எஸ். வைத்தியநாதன் தனது வாதத்தில், 

"அயோத்தியில் தற்போது உள்ள மசூதி கட்டப்படுவதற்கு முன், அந்த இடத்தில் ராமர் கோயில் இருந்தது என்பதை அலாகாபாத் உயர்நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் உறுதிசெய்துள்ளது, ராமர் கோயிலின் இடிபாடுகளுக்கு மேல்தான் மசூதி கட்டப்பட்டது என உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.யு. கான் கூறியுள்ளார். ஹிந்து மக்களைப் பொருத்தவரையில், ஓர் இடத்தைப் புனிதமாகக் கருத, அந்த இடத்தில் கடவுளின் சிலை இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை; ஹிந்துக்களின் நம்பிக்கை ஒன்றே போதுமானது. அயோத்தியிலுள்ள ராமஜென்மபூமியில் ஹிந்துக்கள் வழிபாடு நடத்தியதாக இடைக்காலத்தில் இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டுப் பயணிகள் குறிப்பிட்டுள்ளனர். இதன்மூலம், அயோத்தியில் மசூதிக்கு வெளிப்புறத்தில் ஹிந்துக்கள் வழிபாடு நடத்தி வந்துள்ளது உறுதியாகிறது.

அதே நேரத்தில் , இடைக்காலத்தில் எழுப்பப்பட்ட மசூதியானது, ஹிந்துக்களின் வழிபாட்டுக்குத் தடையாக இருக்கவில்லை. அயோத்தியிலிருந்த மசூதியை முகலாயப் பேரரசர் பாபர் தான் எழுப்பினார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அந்த மசூதியில் கடந்த 438 ஆண்டுகளாகத் தொழுகை நடத்தி வருவதாக சன்னி வக்ஃபு வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறு 

மேலும், 1856-ஆம் ஆண்டு முதல் 1947-ஆம் ஆண்டு வரை அயோத்தியில் மசூதி மட்டுமே இருந்ததாக எந்தவித ஆதாரங்களும் இல்லை. தவிர, 1855-ஆம் ஆண்டு முதல் 1934-ஆம் ஆண்டு வரை அந்த மசூதியில் தொழுகை நடைபெற்றதற்கான சாட்சியங்களும் இல்லை. ஆகவே , சம்பத்தப்பட்ட அந்த இடத்துக்கு முஸ்லிம் பிரிவினர் உரிமை கோர முடியாது. ஆனால், அந்த இடத்தில் ஹிந்துக்கள் பல நூறு ஆண்டுகளாக வழிபாடு நடத்தி வருகின்றனர்",  என்றார் 

ராம் லல்லா விராஜ்மான் தரப்பு சார்பில் ஆஜரான மற்றொரு மூத்த வழக்குரைஞர் கே. பராசரன் இது குறித்து கூறுகையில், இந்த வழக்கில் உரிய நீதி கிடைக்க உச்சநீதிமன்றம் ஆவன செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

English Summary

The belief of Hindus is enough ..! - Ram Lalla Virajman's argument in Ayodhya case ...!

Latest Articles

KOLNews