KOLNews

அடுத்த 7 நாள்..! - அமலாக்கத்துறை காவலில் ப.சிதம்பரம்

தில்லி சிறப்பு நீதிமன்றம்,  ஐஎன்எக்ஸ்  மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்துள்ளது.

74 வயதான முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை, ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை வழக்கில்  மத்திய புலனாய்வுத் துறையினர் ஆகஸ்ட் 21ஆம் தேதி கைது செய்து திகார் சிறையில் அடைத்துள்ளனர்.

முன்னதாக இந்த வழக்கில் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான வழக்கில், அவரைக் கைது செய்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்திருந்தது.

அதையடுத்து, செவ்வாய்க்கிழமை இந்த மனுவை விசாரித்த தில்லி சிறப்பு நீதிமன்றம், "அமலாக்கத் துறை அதிகாரிகள்  திகார் சிறைக்கு சென்று ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்தலாம்; தேவை ஏற்பட்டால் அவரைக் கைது செய்யலாம்' என உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, புதன்கிழமை காலை 8.15 மணிக்கு திகார் சிறைக்கு அமலாக்கத் துறையின் விசாரணை அதிகாரிகள் மூவர் குழு சென்றது. அங்கு அவர்கள் 2 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தியதாகத் தெரிகிறது. பின்னர், சட்டவிரோதப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.

அதன் பின், இந்த கைது குறித்து தில்லி ரௌஸ் அவென்யூ நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹரிடம் அமலாக்கத் துறையின் விசாரணை அதிகாரிகள் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அனுமதி கோரப்பட்டது. இதற்கு அனுமதி அளித்த சிறப்பு நீதிபதி, சிதம்பரத்தை வியாழக்கிழமை 3 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று திகார் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதனிடையே, சிதம்பரத்தை 14 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை சார்பில் தனியாக ஒரு மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரம் வியாழக்கிழமை விசாரிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.

இந்நிலையில் , நீதிமன்ற உத்தரவுப்படி வியாழனன்று சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாள் காவலிலெடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள மனுவிற்கு சிதம்பரம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

வாதத்தின் போது , அவர் தானாகவே விசாரணைக்கு ஆஜராவதாக தெரிவித்த சமயம் அதை கண்டுகொள்ளாத அமலாக்கத்துறை, தற்போது கைது செய்துள்ளது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதன் பின், சிதம்பரத்தை  7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.      

English Summary

The next 7 days ..! - P. Chidambaram in the custody of the Enforcement Department

Latest Articles

KOLNews