KOLNews

இது அதிமுகவின் வெற்றி..! - இபிஎஸ், ஓபிஎஸ் அறிக்கை

அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது - 

மருத்துவ பட்டப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில், இதர பிற்பட்ட வகுப்பினருக்கு அளிக்கப்பட்ட, 27 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, அ.தி.மு.க.,வின் நீண்ட நாளைய கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி. அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் வரும், மருத்துவ சேர்க்கைகளில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, 27 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்காததை எதிர்த்து, தமிழக அரசு சார்பிலும், அ.தி.மு.க., சார்பிலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்றம் இந்த பிரச்னை குறித்து முடிவு செய்ய, ஒரு குழுவை அமைக்கும்படி, 2020 ஜூலை 27ல் உத்தரவிட்டது. இன்றைய வெற்றிக்கு அது அடித்தளம். அதன் தொடர்ச்சியாக குழு அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரை அடிப்படையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், 2021 ஜூலை 29ல், அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படும், 15 சதவீதம் இளநிலை மருத்துவ பட்டப் படிப்புக்கும், 50 சதவீதம் முதுநிலை மருத்துவ பட்டப் படிப்புக்கும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு, 27 சதவீத இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படும் என்று உத்தரவிட்டது.

இந்த ஆணையை எதிர்த்து, சிலர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என ஆணை பிறப்பித்துள்ளது. இது, அ.தி.மு.க.,வின் தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி.மத்திய அரசில், 17 ஆண்டுகள் அங்கம் வகித்து, இதற்காக குரல் எழுப்பாத தி.மு.க., சுயநலத்திற்காக பொது நலத்தை தாரை வார்த்த தி.மு.க., இன்று அ.தி.மு.க.,வின் வெற்றியை, தன் வெற்றியாக பறைசாற்றிக் கொள்வது கேலிக்கூத்தாக உள்ளது.

English Summary

This is the victory of AIADMK ..! - EPS, OPS report

Latest Articles

KOLNews