KOLNews

கெஜ்ரிவால் செய்தது அத்துமீறலா ..அக்கறையா..?

கடந்த சில மாதங்களாக தலைநகர் டெல்லியை கொரோனா புரட்டி போட்டுள்ள நிலையில், தொற்று பரவலை தடுக்க, தனக்கு இருக்கும் அதிகாரங்களை கொண்டு, அதிகபட்சமாக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் முயன்று பார்த்தவண்ணம் உள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். 

முதல் அலையின் போது 'பிளாஸ்மா' சிகிச்சையை, முதலில் முன்னெடுத்த முதல்வர் இவராகத்தான் இருந்தார். இன்று  'பிளாஸ்மா'  சிகிச்சையால் பெரிய பலன் ஏதுமில்லை என்பதாக இந்தியன் மருத்துவம் ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இருப்பினும். 'எதை தின்றால் பித்தம் தெளியும்', என்கிற கெஜ்ரிவாலின் செயல்பாட்டுக்கு பின்னால் உள்ள அக்கறையைத்தான் இதில் நாம் பாராட்டவேண்டும். 

அதே போல நேற்று,  தனது டுவிட்டர் பதிவின் மூலம் மத்திய அரசுக்கு அவர் விடுத்த கோரிக்கையில்,  , 'சிங்கப்பூரில் உருமாற்றம் அடைந்த கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானது. சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு வரும் அனைத்து விமானச் சேவைகளையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்' என கேட்டு கொண்டிருந்தார். 

இதற்கிடையே சிங்கப்பூர் அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம், 'சிங்கப்பூரில் புதிய உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் உருவாகியுள்ளதாக சிலர் கூறும் கருத்துகள் உண்மைக்கு மாறானாவை என்றும்,  சிங்கப்பூரில் எந்தவிதமான புதிய உருமாற்ற கொரோனா வைரசும் இல்லை. என்றும்,அத்துடன் ஆதாரமற்ற தகவல்களை நம்பி, சிங்கப்பூர் குறித்து கருத்து கூறியுள்ளதாக கெஜ்ரிவாலுக்கு  சிங்கப்பூர் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது,  மேலும் இந்தியத் தூதரை அழைத்து வருத்தத்தைத் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கெஜ்ரிவாலை தாக்க ஏதேனும் கிடைக்காத என ஏங்கும் மத்திய அரசுக்கு இது நல்வாய்ப்பாக அமைய,  'கொரோனா வைரசுக்கு எதிரான போரில், குறிப்பாக இந்தியாவுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டபோது விரைந்து ஆக்சிஜன் சப்ளை செய்த சிங்கப்பூர் அரசின் செயல்கள் பாராட்டுக்குரியவை. . நன்கு தெரிந்துகொள்ள வேண்டியவர்களிடமிருந்து பொறுப்பற்ற கருத்துகள் வருவது நீண்டகால நட்புறவைச் சேதப்படுத்தும். இந்தியாவின் பிரதிநிதியாக டில்லி முதல்வர் பேசக்கூடாது' என, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்,

இந்தவிஷயத்தில் கெஜ்ரிவால் கோரிக்கை வைத்தது மத்திய அரசிடம் தானே தவிர, சிங்கப்பூர் அரசை அவர் குற்றம்சாட்டவில்லை. இருப்பினும் எந்த ஒரு தேசமும் தன் நாட்டின் மீதான எதிர்மறை கருத்துக்களுக்கு எதிர்வினையாற்றத்தான் செய்யும். ஆகவே சிங்கப்பூர் அரசின் வருத்தமும் புரிந்துகொள்ளவேண்டியதே...!. ஆனால் இதை சாக்காக வைத்து கொண்டு கெஜ்ரிவால் தனது அதிகாரத்தை மீறி கருத்தை வெளியிடுவதாக குற்றம் சாட்டுவது சரியல்ல. கெஜ்ரிவாலின் சந்தேகத்தை கருத்தில் கொள்வதுடன் சிங்கபூருடனான உறவு நல்ல முறையில் தொடர ஏதுவாக, அவர்களின் கருத்தை கவனத்தில் கொள்வோம் என நம்பிக்கையளித்து கடந்து போகவேண்டும். 

கெஜ்ரிவ்வாலின் கருத்தில் உண்மை உள்ளதா ? என்பது பற்றி கவலைகொள்ளாமல், சிங்கப்பூர் உடனான உறவுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க முயன்றால், மத்திய அரசுக்கு உள்நாட்டு மக்களின் மீதான அக்கறை என்பது சந்தேகத்திற்கு இடமான ஒன்றாக மாறிவிடும். 

English Summary

What Kejriwal did is a violation ..or Care ..?

Latest Articles

KOLNews