KOLNews

பிவி சிந்துவின் அடுத்த இலக்கு இது தானாம்..!

கடந்த மாதம் சுவிட்சர்லாந்தில் நடந்த உலக பேட்மிண்டன் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்திய நட்சத்திர வீராங்கனையான பி.வி.சிந்து தங்கப்பதக்கம் வென்றார். 

இந்நிலையில், டெல்லியில் நேற்று நடந்த ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட பி.வி.சிந்து ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறுகையில், 

உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு பிறகு எல்லோரும் என்னை குறி வைப்பார்கள் என்பது நான் உணர்ந்தது தான். ஆகவே நான் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும். சிலவற்றில் மாற்றம் செய்ய வேண்டும். ஒவ்வொரு முறை நான் களத்தில் இறங்குகையில் புதிய திட்டத்துடன் தான் செல்கிறேன்.

உலக போட்டியில்  5 வருடம் போராடினேன். எல்லா முறையும் தோல்வியை சந்தித்தேன். கடும் போராட்டமும், கடின உழைப்புக்கும் இந்த முறை பலன் கிடைத்தது. எனது பெற்றோர் எனக்காக நிறைய தியாகம் செய்துள்ளனர். வெற்றியில் பயிற்சியாளர்களின் பங்கு முக்கியமானது. பேட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற வலுவான மனநிலை அவசியமானதாகும்.

நான் படிப்படியான  முன்னேற்றம் காணவே  விரும்புகிறேன். அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு முன்பு நிறைய போட்டிகள் இருக்கிறது. நான் என்னுடைய சிறந்த ஆட்ட நிலையை தொடர வேண்டும். அடுத்த ஆண்டு (2020) டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்வதே எனது அடுத்த இலக்காகும். தற்போதைய நிலையில் எனது கவனம் அனைத்தும் அடுத்து நடைபெற இருக்கும் சீனா மற்றும் கொரியா ஓபன் போட்டியில் தான் உள்ளது. இந்த போட்டிகளுக்காக கடினமாக தயாராகி வருகிறேன். 

உலக போட்டியில் தங்கப்பதக்கம் வென்றதன் மூலம் எனது நம்பிக்கை கூடுதலாக உள்ளது. எனது திறன் மீது முழு நம்பிக்கை இருக்கிறது. தேவையற்ற நெருக்கடிகளை என் மீது திணிக்க விரும்புவதில்லை, எனது ஆட்ட திறனில் உண்மையிலேயே நல்ல முன்னேற்றம் கண்டு இருக்கிறேன். இன்னும் நிறைய செய்ய வேண்டியது இருக்கிறது.

என கூறினார்பி.வி.சிந்து .

English Summary

This is the next destination of PV Sindhu ..!

Latest Articles

KOLNews