KOLNews

நெய்வேலி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்..! - முதல்வர் அறிவிப்பு

நெய்வேலியில் உள்ள அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண தொகை அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

முன்னதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது - 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் நெய்வேலியில் உள்ள அனல் மின்நிலையம் 2-ல் உள்ள அலகு 5-ல் இயங்கிக் கொண்டிருந்த கொதிகலன் ஒன்று திடீரென வெடித்த விபத்தில், 6 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

கொதிகலன் வெடித்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த தகவல் கிடைக்கப் பெற்றவுடன், தீ விபத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்கவும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கவும் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்.

எனது உத்தரவின்பேரில் தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத், மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, தீயணைப்புத்துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து, மீட்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்தில் 17 பேர் காயமடைந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் வருத்தமடைந்தேன். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க கடலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு நான் உத்தரவிட்டுள்ளேன். இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

English Summary

3 lakhs of family, lost in Neyveli accident - Chief Minister's Notice

Latest Articles

KOLNews