KOLNews

ஆவின் பால் அதிரடி விலையேற்றம்..! - நாளை முதல் அமுலுக்கு வருகிறது..!

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம், ஒரு லிட்டர் "க்ரீன் மேஜிக்' ஆவின் பால் இனி ரூ.47-க்கு கிடைக்கும். பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் "ஆவின் நைஸ்' பால் லிட்டருக்கு ரூ.36-இல் இருந்து ரூ.42-ஆக உயர்கிறது.

தமிழக அரசு , நேற்று ஆவின் பால் விலை மற்றும் பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலையை உயர்த்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. 

அதன் படி...

 கடந்த நான்கு ஆண்டுகளில் பசுந்தீவனம், கலப்புத் தீவனம், உலர் தீவனம், தவிடு, புண்ணாக்கு ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளதாகவும், பால் கொள்முதல் விலையை உயர்த்தித் தர வேண்டுமெனவும் உற்பத்தியாளர் சங்கங்கள், பால் உற்பத்தியாளர்கள் சார்பில் அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

அதையடுத்து, அவர்களின் கோரிக்கையைக் கருத்தில் கொண்டு, கிராம அளவில் உள்ள தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள 4.60 லட்சத்துக்கும் மேலான பால் உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையில் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்து, கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.28-இல் இருந்து ரூ.32 ஆக, அதாவது லிட்டருக்கு ரூ.4 உயர்த்தி உள்ளது.. அதே போல எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.35-இல் இருந்து ரூ.41 ஆக, அதாவது லிட்டருக்கு ரூ.6 உயர்த்தி வழங்க தமிழக அரசு அறிவித்துள்ளது.

பால் விலை உயர்வு...

பால் கொள்முதல் விலையை உயர்த்துவதால் அனைத்து வகையான ஆவின் பால் விற்பனை விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்படும். இந்த விலை உயர்வானது ஆகஸ்ட் 19 முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதே போல, ஆவின் நிறுவனத்தின் வெண்ணெய், நெய் போன்ற பொருள்களின் விலையும் விரைவில் உயர்த்தப்படும் என ஆவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

முன்னதாக, கடந்த 2011-ஆம் ஆண்டில் இருந்து இதுவரை மூன்று முறை பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2011-இல் மறைந்த ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது பால் விலை லிட்டருக்கு ரூ.6.25-ஆக உயர்த்தப்பட்டது. அதன்படி, ரூ.17.75-க்கு விற்கப்பட்டு வந்த ஒரு லிட்டர் பால் ரூ.24 ஆக அதிகரிக்கப்பட்டது.

அதன் பின், 2014-ஆம் ஆண்டு அக்டோபரில் ஆவின் பால் விலையை அப்போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் உயர்த்தினார். லிட்டருக்கு ரூ.10 என்ற அளவில் அதிகரிக்கப்பட்டது. அதன்படி, ரூ.24-ஆக இருந்த ஒரு லிட்டர் பால் விலை ரூ.34 ஆக உயர்ந்தது.

அதை தொடர்ந்து 5 வருடங்களுக்கு பின்,முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஆட்சியில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English Summary

Aavin Milk Price hike - Comes into effect from tomorrow ..!

Latest Articles

KOLNews