KOLNews

தளதள தண்ணீருடன் காட்சியளிக்கும் சென்னை ஏரிகள்..! - 7.1 டி.எம்.சி.யை எட்டின

வடகிழக்கு பருவ மழையின் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து வந்தது. பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதிநீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், மழை தண்ணீரும் ஏரிக்கு வருவதால் ஏரிகளின் நீர்மட்டம் தற்போது 7.1 டி.எம்.சி.யை தாண்டி உள்ளது.இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை நன்றாக பெய்யும் என்று கணக்கிடப்பட்டதை மெய்ப்பிக்கும் வகையில்,  எதிர்பார்த்தப்படி பெய்த மழையால் ஏரிகளுக்கு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 

இன்று காலை நிலவரப்படி 11 ஆயிரத்து 257 மில்லியன் கன அடி (11.25 டி.எம்.சி.) கொள்ளளவு கொண்ட பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளிலும் 7 ஆயிரத்து 137 மில்லியன் கன அடி (7.1 டி.எம்.சி.) நீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 3 ஆயிரத்து 179 மில்லியன் கன அடி (3.17 டி.எம்.சி.) நீர் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதே போல, பூண்டி ஏரிக்கு 670 கனஅடியும், சோழவரம் 69 கன அடி, புழல் 117 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து இல்லை. அதேநேரம் குடிநீர் தேவைக்காக பூண்டியில் இருந்து 125 கனஅடி, புழல் 140 கனஅடி, செம்பரம்பாக்கத்தில் இருந்து 82 கன அடி வீதம் நீர் திறக்கப்படுகிறது.

சென்னை நகரின் சராசரியாக மாதம் ஒரு டி.எம்.சி.தண்ணீர் தேவை இருக்கும் போது, தற்போது இருக்கும் நீர் சராசரியாக 7 மாத தேவையை பூர்த்தி செய்ய முடியும் என சொல்லப்படுகிறது. அடுத்து வரும் நாட்களிலும் மழை போதுமான அளவு பெய்தால் ஏரிகளின் நீர் சேமிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து 2 நாட்களாக ஏரிகளுக்கு நீர் வரத்து குறைந்து உள்ளது. இருப்பினும் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட 4 ஏரிகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

English Summary

Chennai lakes with full of water ..! - Reached 7.1 TMC

Latest Articles

KOLNews