நிதீ ஆயோக் அமைப்பு, நாட்டில் 2030க்கு பிறகு மின்சார வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும் என்றும் , அதற்கான திட்டங்களை உருவாக்க சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சரவைக்கு பரிந்துரை செய்துள்ளது.
மேலும், அனைத்து வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கும் இது குறித்தான அறிவுரை வழங்க வேண்டும். மத்திய அரசு, மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பயன்படுத்தப்படும். பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் கார்களை, மின்சாரத்தில் இயங்கும் கார்களாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 2030க்குள் 50 ஜிகாவாட் ஹவர் பேட்டரிகளை உருவாக்க வேண்டும். என அந்த பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.
மின்சார வாகனங்களுக்கு மாறுவதன் மூலம், தற்போது எரிபொருள் இறக்குமதிக்கு ஆகும் செலவில் ரூ.3 லட்சம் கோடி அரசுக்கு மிச்சமாகும். அது தவிர இந்த வாகனங்களுக்கான பேட்டரி தயாரிப்பு மூலம், நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும். என நிதீ ஆயோக் அமைப்பு கணித்துள்ளது.
மேலும் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில், முதலாண்டில் வரிச்சலுகை அளிக்கலாம் எனவும் கூறியுள்ளது.
ஏற்கனவே மின்சார வாகனங்கள் உற்பத்தியில் ஜப்பான் மற்றும் தென் கொரியா, முன்னணியில் உள்ளதால், இந்தியாவில் மின்சார வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்ற திட்டத்தை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. அந்த சமயத்தில், 2030க்குள் மின்சார வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும் என கூறியிருந்த அமைச்சர் கட்காரி, தற்போது, இந்த திட்டம் குறித்து அனைவருடனும் ஆலோசனை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் நிதீ ஆயோக், 2025 முதல், 150சிசி இன்ஜின் திறன் கொண்ட, மின்சாரத்தில் இயங்கும் மூன்று மற்றும் இரு சக்கர வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
Electric cars 2030 onwards ..! - Nithi Aayog Advice