மத்திய சுகாதாரதுறை தரப்பிலிருந்து, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக, ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனத்துடன் இதுவரை ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை எனும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
முன்னதாக இது தொடர்பாக, தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்,சில கேள்விகளை மத்திய சுகாதார அமைச்சகத்திடம் கேட்டிருந்தார்.
இதற்கு மத்திய சுகாதாரத் துறை தரப்பிலிருந்து அளிக்கப்பட்ட பதிலில் , ஜைக்கா நிறுவனத்துடன், கடன் உதவிக்கான ஒப்பந்தம் இதுவரை கையெழுத்தாகவில்லை என்றும். இந்தியாவில் உள்ள ஜைக்கா நிதி நிறுவன அதிகாரிகள், ஜப்பானில் உள்ள அந்த நிறுவன அதிகாரிகளுடன் கடந்த மாதம் 24ம் தேதி ஆலோசனை நடத்தியதாகவும், கடனுதவி ஒப்பந்தம் வரும் மார்ச் மாதம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மதுரையையடுத்த தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்தின் 80 சதவிகித நிதியை (சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய்) கடனாக ஜப்பானை தலைமையிடமாகக் கொண்டுள்ள ஜைக்கா என்ற நிதி நிறுவனம் வழங்க உள்ளது. இருப்பினும் கட்டுமானப் பணிகள் தொடங்குவதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில், கடனுதவி ஒப்பந்தம் தாமதாகியுள்ளதால், தோப்பூர் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை தொடங்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ளதுடன், இவ்விவகாரம் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் பேசும்பொருளாக அமையும் வாய்ப்பும் உள்ளதால் தற்போது முக்கியத்துவம் பெறுகிறது.
English Summary
Haven't signed the funding agreement yet ..? - Madurai AIIMS affair