அண்மை காலமாக, மின்னஞ்சல் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் கடன் பெற்று கொள்ள மக்களை சபலப்படுத்தும் தனியார் நிதி நிறுவனங்கள், கடன் வாங்கிய பின் அதனை வசூலிக்கும் நடைமுறைகளில் சரியான நெறிமுறைகளை பின்பற்றுவதில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இந்நிலையில், கடன் செயலி நிறுவனங்கள் தங்களுக்குத் தாங்களே அதிகாரத்தை வகுத்துக்கொள்வது சட்டவிரோதம் என கருத்து தெரிவித்துள்ள உயர்நீதிமன்றக்கிளை, இதுகுறித்து ரிசர்வ் வங்கி, கூகுள் நிறுவனம் மற்றும் மத்திய-மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர், சட்டவிரோதமாக செயல்படும் கடன் வழங்கும் செயலிகளை தடை செய்ய கோரி தாக்கல் செய்த மனு, உயர்நீதிமன்றக் கிளையில் நேற்று, எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கடன் செயலி மூலம் கடன் பெற்று தற்கொலை செய்வது இந்தியாவில் மிக முக்கிய பிரச்னையாக இருந்து வருவது வருத்தத்திற்குரியது என தெரிவித்த நீதிபதிகள், கடன் வழங்கும் நிறுவனங்கள், கடன் வசூலிப்பதில் தங்களுக்கு தாங்களே அதிகாரங்களை வகுத்து கொள்வது சட்டவிரோதம் என்றும், இதுபோன்ற கடன் செயலி மூலம், நாட்டுக்குள் சமூக விரோத சக்திகள் உட்புக வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.
அத்துடன், கடன் செயலி தொடர்பாக ரிசர்வ் வங்கி ஆளுநர், கூகுள் நிறுவனம், மத்திய நிதித்துறை செயலர் மற்றும் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை பிப்ரவரி மாதம் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
English Summary
Loan companies that take power ..! - High Court important order