KOLNews

இரண்டாம் குத்து ! - வேதனையை வெளிப்படுத்திய நீதிபதிகள்

'இருட்டு அறையில் முரட்டு குத்து' திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் என சொல்லப்படும் 'இரண்டாம் குத்து' திரைப்படமும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இத்திரைப்படத்தை  திரையிட தடை விதிக்கவும், படத்தின் டீசரை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கக் கோரிய வழக்கில் Youtube, Facebook, Google மற்றும் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக மதுரையைச் சேர்ந்த பெருமாள் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், இரண்டாம் குத்து திரைப்படத்தின் டீசர், பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளின் எதிர்காலத்தை சீரழிக்கும் விதமாக அமைந்துள்ளதாக தெரிவித்திருந்தார். படத்தின் டீசர் வெளியிடப்பட்ட சில மணி நேரத்தில் பல லட்சம் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். டீசரில் சமூகத்தை சீர்குலைக்கும் விதமாக பல வசனங்கள் அமைந்துள்ளதாகவும், சில வசனங்கள் இரட்டை அர்த்தத்தில் உள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுபோன்ற சமூகத்தை சீர்குலைக்கும் விதமாக வெளியிடப்படும் திரைப்படங்கள் மூலம் மாணவர்கள் தவறான பாதையில் செல்வதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்பதால், இரண்டாம் குத்து" திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும், படத்தின் டீசரை சமூக வலைதளத்தில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரியிருந்தார். 

இந்நிலையில், இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்பு, பாசமலர் போன்ற குடும்ப படங்கள் வெளிவந்த நிலையில், தற்போது தகாத வார்த்தைகள், இரட்டை அர்த்தங்கள் ஆகியவற்றை படத்தில் கொண்டுவந்து விளம்பரத்தை தேடுகின்றனர் என நீதிபதிகள் வருத்தம் தெரிவித்ததோடு, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நெடுங்தொடர்கள் ஆபாச பேச்சுகள், தகாத உறவுகள் ஆகியவற்றை பற்றியே கூறுவதாகவும் இதற்கு தணிக்கைக் குழு எதுவும் கிடையாதா? என்றும் கேள்வி எழுப்பினர். 

அத்துடன், யூடியூப், பேஸ்புக், கூகுள் மற்றும் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள், படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பவும், மத்திய தணிக்கை குழு, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை ஆகியவற்றை எதிர் மனுதாரராக இணைத்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 20-ம் தேதி ஒத்திவைத்தனர்.

English Summary

Second Punch! - Judges who expressed pain

Latest Articles

KOLNews