KOLNews

மரபு வைத்தியம் vs நவீன மருத்துவம். - பகுதி 1.

ஆங்கிலத்தில் 'Has stood the test of time' என்று சொல்லுவார்கள். அதன் பொருள் காலத்தை கடந்து இன்றும் பொருந்தும் என்பதாகும். மரபு என்ற சொல்லும் ஏறக்குறைய இதே பொருளுடையது. மரபை உடைத்து உருவகும் எந்த நவீன மேம்படுத்தலும் அதன் அடிப்படை அறத்தைத் தக்கவைக்கவிலை எனில் அதுவும் கேள்விக்கு உள்ளாக்கப்பட வேண்டும். 

இங்கு மரபை கேலிக்குள்ளாக்கி புறந்தள்ளுவது, நவீனத்துவத்தை முற்றிலும் மறுத்து ஒதுக்குவது என்ற கும்பல் மனப்பான்மை தேவையற்றது. மருத்துவம் சார்ந்து இன்று இவ்விரு பிரிவினரிடையே நடக்கும் முரட்டு வாதங்களும், முட்டுக் குடுப்புகளும் சற்று கவலைக்குறிய விஷயங்களே. இது பற்றிய என் சொந்த அனுபவத்தை பகிர்கிறேன். 

சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் எனக்கு காமாலை ஏற்பட்ட பொழுது முற்றிலும் மரபு வைத்தியம் செய்யவே நவீன மருத்துவர்களால் பரிந்துரைக்கப் பட்டேன். எனது நோயை ஆரம்ப நிலையில் கண்டறிய உதவியது நவீன மருத்துவ சோதனை. ஆனால் மரபு வழி வைத்தியர் அதை ஒத்துக் கொள்ளாமல் கண்களில் மஞ்சள் படர்ந்தால் மட்டுமே வைத்தியம் பார்ப்பேன் என்று கூறி விட்டார். காமாலையில் இந்த நிலைமை வர கிட்டத்தட்ட நோய் நாற்பது சதவிகிதம் முற்றிய பின்பே தெரியும். இது ஒரு அபாயகரமான போக்கு. 

இங்குதான் பிரச்சினை தொடங்கியது. காமாலை நோய் வந்த உடன் ஏற்படும் உபாதைகள் உங்களை முற்றிலும் முடக்கி விடும். நவீன வைத்தியம் நோயை உறுதி செய்ய மரபு வைத்தியம் மறுதலிக்கிறது. நோயாளியின் நிலை என்ன இப்பொழுது? திரிசங்கு நரகம். கடைசியில் நான் பாட்டி வைத்தியம் மூலம் கீழா நெல்லி, கடுமையான உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் நோயை எதிர்த்து போராடி குணமானேன்.

உண்மையில் நடந்து இருக்க வேண்டியது இந்த இரு மருத்துவ முறைகளும் இங்கு இணைந்து செயல் பட்டிருக்க வேண்டும். 

இன்று நவீன மருத்துவம் பல்வேறு ஆய்வுகளுக்குப் பின் இதே நோய்க்கு தடுப்பு மருந்து, நோய்க்கூறுகளுக்கான காரணங்களை மூன்றாகப் பிரித்து அதற்கேற்ப மருந்துகளை பரிந்துரைப்பது என்று வளர்ந்து விட்டது. மரபு வைத்தியம் அதே இடத்தில் தங்கி விட்டது. இதில் நான் காணும் ஒரு விந்தை இன்றும் காமாலைக்கு மக்களிடையே மரபு மருத்துவத்தின் மீதே அதிகம் நம்பிக்கை உள்ளது. ஆனால் அவர்கள் இது பற்றி ஏதாவது ஆய்வுகள் மேற்கொண்டு மருத்துவ திறன்களை மேம்படுத்தி உள்ளதாக எந்த தரவுகளும் இருப்பதாகத் தெரியவில்லை. 

இதுதான் மரபு மருத்துவத்தில் இருக்கும் பெரும் பிரச்சினை.

இது பற்றி பேசுவதற்கு நிறைய உள்ளது....... பேசுவோம்.

---------------------------------------------------------------------

கட்டுரையாளர் பார்த்திபன் இரத்தினவேலு

English Summary

Traditional medicine vs modern medicine. - part 1.

Latest Articles

KOLNews