KOLNews

காசா நகர் மீது குண்டு மழை..! - தொடரும் அலறல் சத்தம்.

ஜெருசலேம்,  எல்லைப்பிரச்சினையும் மத உணர்வுடன் கூடிய மோதல்களாலும் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பகை நீடித்து வரும் நிலையில் கடந்த 10-ந்தேதி பாலஸ்தீனத்தின் காசா நகரைச் சேர்ந்த ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே தொடங்கிய மோதல் தொடர்ந்து தீவிரமாகி வருகின்றன. காசா நகரில் இருந்து ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் நகரங்கள் மீது ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்துவதும் அதற்கு பதிலடி தரும் விதமாக இஸ்ரேல் போர் விமானங்கள் காசா நகர் மீது வான் தாக்குதல் நடத்தி வருவதும் கிட்டத்தட்ட அன்றாட நிகழ்வாகிவிட்டது. 

இது லேசில் முடிவுக்கு வராது என்பது போல், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ ஹமாஸ் குழுவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை முழு வலிமையுடன் தொடரும் என தெரிவித்துள்ளார்.

அதனை உறுதிப்படுத்துவது போல், நேற்று இஸ்ரேலின் 50 போர் விமானங்கள் சுமார் 20 நிமிடங்களுக்கு காசா நகர் மீது  80 முறை வான் தாக்குதல்கள் மூலம் குண்டு மழை பொழிந்துள்ளது. இந்த வான் தாக்குதல்கள், ஹமாஸ் போராளிகள் குழுவின் நிலைகள் மற்றும் அந்த அமைப்பின் தலைவர்களின் வீடுகளை இலக்காக வைத்து நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது. மறுபுறம், இஸ்ரேலின் வான் தாக்குதல்களில் காசா நகரில் முக்கியமான சாலைகள் மற்றும் மின் இணைப்புகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டதாக பாலஸ்தீன அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதற்கிடையில் ஹமாஸ் போராளிகளும் தொடர்ந்து இஸ்ரேல் நகரங்கள் மீது கொத்துக் கொத்தாக ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் இஸ்ரேலின் ஆஹ்கேலோன், ஆஷ்தோத், நெடிவோட் ஆகிய நகரங்களும் மத்திய மற்றும் தெற்கு இஸ்ரேலின் பிற பகுதிகளும் தாக்குதலுக்கு உலாகியதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் அங்கிருந்து காயமடைந்தவர்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்த செய்தி எதுவும் வெளியாகவில்லை.

கடந்த திங்கட்கிழமை முதல் நடந்து வரும் இருதரப்பு மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது.

இஸ்ரேலின் வான் தாக்குதல்களில் காசா நகரில் இதுவரை 198 பேர் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன தரப்பில் கூறப்படுகிறது. இரு தரப்பு தாக்குதல்களில் சிறுவர்களும் தாக்கப்பட்டுள்ளது உலகை கவலைகொள்ள செய்துள்ள நிலையிலும், தீர்வுகாண அறிகுறி ஏதும் தெரியவில்லை என்பதே யதார்த்த நிலையாக உள்ளது. 

English Summary

Bomb rain on Gaza City ..! - Continuing screaming noise.

Latest Articles

KOLNews